Published : 25 Mar 2017 10:27 AM
Last Updated : 25 Mar 2017 10:27 AM
தலைநகர் டெல்லியில் மனம் தளராமல் போராடும் தமிழக விவசாயிகளைப் பார்க்கும்போது கண்கள் கலங்குகின்றன. தள்ளாத வயதில் அவர்கள் தலையில் சட்டியை தூக்கி வைத்துக்கொண்டுப் போராடுகிறார்கள். கழுத்தில் மண்டை யோடு அணிந்துப் போராடு கிறார்கள். இடுப்பில் வெறும் கோவணம் கட்டிக்கொண்டுப் போராடு கிறார்கள். பழங்குடிகளைப் போல இலை, தழைகளை அணிந்துப் போராடுகிறார்கள். மரத்தில் தூக்கில் தொங்கிப் போராடுகிறார்கள்.
நெற்றியில் நாமமும் உடல் முழுவதும் திருநீறு பூசியும் போராடுகிறார்கள். திருவோடு ஏந்திப் போராடுகிறார்கள். கைவிட்டுப் போய்க்கொண்டிருக்கும் தங்கள் வாழ்க்கையை எப்படியாவது திரும்பப் பெற துடிக்கும் போராட்டம் அது. இனி, இழப்பதற்கு உயிரைத் தவிர வேறு எதுவும் இல்லை என்கிற நிலையிலான போராட்டம் அது. மத்திய அரசின் கவனத்தை எந்த வகையி லாவது ஈர்த்துவிட மாட்டோமா? ஆள்வோரின் கடைக்கண் பார்வை தங்கள் மீது விழாதா என்று பரிதவிக் கும் போராட்டம் இது. உண்மையில் தேசிய அவமானம் இது!
தவறு அரசுகளின் மீது மட்டும் இல்லை; விவசாயிகளின் இந்த நிலைக்கு மக்களாகிய நாம் ஒவ்வொருவருமே பொறுப்பு. கடந்த பொங்கல் பண்டிகை நாட்களில் டெல்டா மாவட்டங்களின் விவசாயிகள் பலரையும் சந்தித்துப் பேசினேன். அடிப்படையாக மூன்று விஷயங்களை உணர முடிந்தது.
ஒன்று, அடுத்த தலைமுறையில் விவசாயம் செய்ய ஆட்கள் இல்லை. அதிலும் தங்கள் குழந்தைகளையும் விவசாயத்தில் தள்ளிவிட விவசாயிகளுக்கு விருப்பம் இல்லை. இரண்டாவது, இன்றைய நடைமுறை விவசாயத்தில் லாபம் இல்லை. மூன்றாவது, ஏரி, குளங்கள், கால்வாய்கள், சிறு வாய்க்கால்கள், அணைகள், ஆறுகள் என அனைத்து நீர்நிலைகளின் உள்கட்டமைப்புகளும் கடுமையாகப் பழுதடைந்து செயல் பாட்டை இழந்துள்ளன.
தமிழகத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணிகள் மட்டும் முழுமையாக நடந்திருந்தால் நிச்சயம் விவசாயிகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. ஏனெனில் அந்தத் திட்டத்தின் அடிப்படை விதிகளிலேயே ‘திட்டப் பணிகளில் குறைந்தது 60 சதவீதம் நேரடியாக விவசாயம் சார்ந்த சொத்துக்களை உருவாக்கும் வளர்ச்சிப் பணிகளாக இருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. குறிப்பாக, 2016-17ம் ஆண்டு திட்ட அறிக்கையில் குறைந்தது ஐந்து லட்சம் சிறு, குறு விவசாயிகளின் நிலங்களில் கிணறு வெட்ட வேண்டும்; வரப்பு எடுக்க வேண்டும்.
குறைந்தது 10 லட்சம் தனி யார் விவசாய நிலங்களில் இயற்கை உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க வேண்டும் ஆகியவை இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தவிர, பாசன நீர்நிலைகளில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தொழில்நுட்பங்களும் விளக்கப்பட்டுள்ளன. ஆனால், அரசு திட்டங்களைப் பற்றி பலரும் அடிப்படைத் தகவல்களைக் கூட அறியாமல் அலட்சியமாக இருப்பதே பிரச்சினைகளின் அடிப்படை காரணம். இதுவே ஊழல் பேர்வழிகளுக்கும் வசதியாகப் போய்விட்டது.
பஞ்சாயத்து ராஜ்ஜியம் சட்டத் தையும் உள்ளாட்சி அமைப்பு களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத் தும் விதமாக கொண்டு வரப்பட்டது தான் நூறு நாள் வேலைத் திட்டம். 18 வயது நிரம்பிய அனைவரும் இந்தத் திட்டத்தில் பணிபுரிய தகுதியான வர்களாவர். வேலைக்கு வாய்மொழி யாக விண்ணப்பிக்கலாம். அதனை விண்ணப்பமாக எழுதிக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள். போன் மூலம் விண்ணப்பிக்கலாம். குரல் பதிவு முறை (Interactive voice response system) மூலம் உங்கள் விண்ணப்பம் பதிவு செய்துகொள்ளப்படும்.
வெள்ளைத் தாளில் எழுதியும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவம் 6-யை பூர்த்திசெய்து விண்ணப்பிக்கலாம். இணையத்திலும் விண்ணப்பிக்கலாம். இதற்காக கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், வார்டு உறுப்பினர், பஞ்சாயத்துச் செயலாளர், திட்ட அலுவலர், அங்கன்வாடி பணியாளர், சுய உதவிக் குழுக்கள், நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்ட தொழிலாளர் குழுக்கள் இவர்களை அணுகலாம். பெறப்படும் விண்ணப்பத்துக்கு அந்தத் தேதியிட்ட கணினி ரசீது அளிக்கப்படும். ரசீது அளிக்கப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள் வேலை தர வேண்டியது கட்டாயம். ஏதேனும் குறைகள் இருந்தால் 1299 என்கிற இலவச எண்ணுக்கு அழைக்கலாம்.
வேலை கொடுக்க இயலவில்லை எனில் வேலையில்லாத நாட்களுக்கான உதவித் தொகையாக முதல் 30 நாட்களுக்கான கூலியில் நான்கில் ஒரு பங்கை அளிக்க வேண்டும். அடுத்தடுத்த காலகட்டங்களில் வேலையின்மை நீடித்தால் 30 நாள் கூலியில் பாதிக்கும் குறையாமல் அளிக்க வேண்டும். மேற்கண்ட தொகை 15 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்ட ஊதிய நிதி நிலை அறிக்கையில் மாநில அரசு இதற்கான நிதியை ஒதுக்க வேண்டும்.
தவிர, தாங்கள் என்ன வேலையை செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக் கும் உரிமையும் பயனாளிகளான மக்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. சாயத் தொழிற்சாலை வேண்டுமா? இயற்கை உரம் தயாரிப்பு மையம் வேண்டுமா? கட்டிடம் கட்ட வேண்டுமா? ஏரியைப் புனரமைக்க வேண்டுமா என்று வேலையை அந்தப் பகுதி மக்களே தீர்மானித்து, அதனை மனுவாக கிராம சபையில் அளிக்க வேண்டும். இது கிராம சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு கிராமப் பஞ்சாயத்து - ஒன்றியம் - மாவட்டப் பஞ்சாயத்து - மாவட்ட நிர்வாகம் (மாநில அரசு) வழியாக ஒப்புதல் அளிக்கப்பட்டு கிராமப் பஞ்சாயத்தில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு ஒரு மாவட்டத்தில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தாமதமாகிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு அரசு நடைமுறைகளுக்கும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராம சபை மூலம் பெறப்பட்ட திட்டப் பணிகள், அதன் மீதான ஆலோசனை தொடர்பான பணிகள் ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 2-ம் தேதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.
மேற்கண்ட திட்டப் பணிகளை அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி டிசம்பர் 30-ம் தேதிக்குள் சிறப்பு கிராம சபைகளை கூட்டி அங்கீகரிக்க வேண்டும். இதற்கிடையே அந்தத் தீர்மானங்களை டிசம்பர் 5-ம் தேதிக்குள் ஒன்றியத்துக்கு அனுப்ப வேண்டும். அதனை ஒன்றியங்கள் பரிசீலித்து டிசம்பர் 20-க்குள் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டும்.
ஆண்டு திட்டப் பணிகள் அறிக்கை மற்றும் ஊதிய நிதிநிலை அறிக்கையை கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம் ஜனவரி 20-ம் தேதிக்குள் மாவட்ட பஞ்சாயத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனை மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் ஜனவரி 31-ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட திட்ட அறிக்கை மற்றும் ஊதிய நிதிநிலை அறிக்கையை மாநில அரசு பிப்ரவரி 15-க்குள் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மார்ச் 31-ம் தேதிக்குள் மேற்கண்ட அனைத்தும் மாநில அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஏப்ரல் 7-ம் தேதிக்குள் பணி களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேற்கண்டவற்றில் ஒரு விஷயம்கூட ஒழுங்காக செயல்படுத்தப்படுவது கிடையாது. அனைத்து நடைமுறை களும் கண் துடைப்புக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. இதோ ஏப்ரல் மாதம் நெருங்கவிருக்கிறது. விவசாயிகள் மீது உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தால் வரும் ஏப்ரல் மாதத்தில் உங்கள் கிராமத்தில் என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன என்பதை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அல்லது பஞ்சாயத்துச் செயலாளரிடம் கேட்டறி யுங்கள்.
வேலைகள் தரமாக நடக்கிறதா என்று கண்காணியுங்கள். தவறுகளைத் தட்டிக் கேளுங்கள். அது நம் வயிற்றுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு செய்கின்ற நன்றிக் கடனும் கூட!
தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT