Published : 01 May 2017 11:45 AM
Last Updated : 01 May 2017 11:45 AM

தேனி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற சுற்றுலாத் தலமான கும்பக்கரை: ஆண்டுக்கு ஐந்து பேர் பலியாகும் பரிதாபம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளதால், ஆண்டுக்கு சராசரியாக ஐந்து பேர் பலியாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

பெரியகுளத்தில் இருந்து ஏழு கி.மீ. தூரத்தில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. பெரியகுளத்தில் இருந்து போதுமான பஸ் வசதி இல்லாதபோதும், ஆட்டோக்கள், கார்கள், வேன்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

கும்பக்கரை அருவி உள்ள இடம் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும். மேலும் இந்த அருவி தேனி மாவட்டத்தில் இருந்தாலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனக்கோட்டத்துக்கு உட்பட்டது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்தபோதும், வனஎல்லையில் அருவி இருப்பதால் சுற்றுலா பயன்பாட்டுக்காக மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அருவிக்கு சென்றுவர அனுமதி உண்டு. பெரியவர்களுக்கு ரூ. 15. சிறியவர்களுக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வனப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பாலிதீன் பயன்படுத்தக் கூடாது. சோப்பு, ஷாம்பு, எண்ணெய் வகைகளை உபயோகப்படுத்தக் கூடாது. மது பானங்களை கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதிக்கின்றனர். ஆனால், இந்த கட்டுப்பாடுகளை சுற்றுலாப் பயணிகள் முழுமையாக கடைப்பிடிப்பதில்லை.

அருவியின் மேல்பகுதியில் பாறைகளில் பெரிய பள்ளங்கள் மற்றும் அருவியின் கீழ் பகுதியில் யானை கஜம் என்ற நீர் நிரம்பிய பெரிய பள்ளமும் உள்ளது. பாறை இடுக்குகளிலும் தண்ணீர் தேங்குவதால், இந்த பள்ளங்களில் குளிப்பவர்கள் பாறை இடுக்குகளில் சிக்கி உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது. பலரின் உயிரிழப்புக்குப் பிறகு யானைகஜம் பகுதி கம்பி வேலியால் மூடப்பட்டது. இருந்தபோதும் வழுக்கும் பாறைகள் நிறைந்த பகுதியாக கும்பக்கரை அருவி இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது.

சில தினங்களுக்கு முன் அருவியில் தண்ணீர் வரத்து இல்லாதநிலையில், அருவியின் மேற்பகுதியில் உள்ள பள்ளத்தில் கிடந்த தண்ணீரில் குளிக்கச் சென்ற சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் தனது மகனுடன் பலியான பரிதாப சம்பவம் நடந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் கும்பக்கரை அருவி பகுதியில் 50 பேர் பலியாகி உள்ளனர். ஒரு ஆண்டுக்கு சராசரியாக 5 பேர் கும்பக்கரை அருவி பகுதியில் உயிரிழக்கும் நிலை உள்ளது.

இந்த ஆபத்தான அருவி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்ப பாதுகாப்பு வசதிகள் செய்துதர முடியாத நிலையில் வனத்துறை உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி என்பதால், தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கான கட்டுமானப் பணிகளை அதிகளவில் செய்ய முடியவில்லை.

வரும் காலங்களில் உயிரிழப்புகளைத் தடுக்க வனத்துறையினர் கடுமையாக விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆபத்து நிறைந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கலாம். அதையும் மீறி, பாதுகாப்பு என்பது அவரவரிடம் தான் உள்ளது. பாறை கள் மீது தண்ணீர் செல்வதால் எந்த இடம் வழுக்கும் என்று தெரியாத நிலை உள்ளது. மொத்தத்தில் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு குளிக்கும் நிலைதான் உள்ளது.

இதுகுறித்து கொடைக்கானலில் உள்ள மாவட்ட வன அலுவலர் முருகன் கூறியதாவது: கும்பக்கரை அருவி பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி சுற்றுலா பயணிகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் தண்ணீர் தேங்கியுள்ள பள்ளங்களில் இரும்பு கம்பிகள் அமைத்து மூடவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆபத்தான இடங்களில் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட உள்ளது. சில தினங்களுக்கு முன்பு தடையையும் மீறி குளிக்கச்சென்ற இருவர் பலியாகினர். இந்த சம்பவத்தையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வனஅலுவலர்களை அப்பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை தர கேட்டுள்ளேன்.

வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தாலும், ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கு எச்சரிக்கையையும் மீறி சுற்றுலா பயணிகள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x