Published : 05 May 2017 09:49 AM
Last Updated : 05 May 2017 09:49 AM

வறட்சியால் விளைச்சல் பாதிப்பு மாம்பழத்துக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காத நிலை: விவசாயிகள் ஏமாற்றம்

கோடை மழை கைகொடுக்காதது, காற்றில் காய்கள் உதிர்ந்தது போன்ற காரணங்களால் இந்த ஆண்டு மாம்பழம் விளைச்சல் போதிய அளவுக்கு இல்லை. விலையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் விவசாயிகள் பாதிக் கப்பட்டுள்ளனர்.

மனிதனுக்கு இயற்கை அளித்த வரப்பிரசாதம் பழங்களாகும். சங்க இலக்கியங்களில் முக்கனிகளில் ஒன்றாக பெருமையாக சொல்லப் படும் மாங்கனி, வெப்ப மண்டல சமவெளி பகுதிகளில் விளையக் கூடியது. உலகின் மொத்த மாங்கனி உற்பத்தியில் 65 சதவீதம் வரை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மாம்பழங்களில் பல ரகங்கள் உள்ளன. இதில் நீலம், பெங்களூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா, ஹிமாபசந்த், செந்தூரம், பையூர் அல்போன்ஸா, சிந்து, பஞ்சவர்ணம் போன்றவை முக்கியமான ரகங்கள். இந்த பழங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு பகுதிக்கு பிரசித்தி பெற்றவை.

இந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி, மா மரங்களுக்கு உகந்ததாக இருந் தாலும் கோடை மழை கைகொடுக்காததால் முழு பருவம் அடைவதற்கு முன்பே மாங்காய்கள் உதிர்ந்துவிடுகின்றன. கடந்த வாரம் வீசிய சூறாவளி காற்றில் பல ஆயிரம் டன் மாங்காய்கள் உதிர்ந்து விழுந்ததால் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி மரங்களைக் காப் பாற்றிய விவசாயிகள் எதிர்பார்த்த மகசூல், விலை கிடைக்காமல் நஷ்டமடைந்துள்ளனர். தற்போது கோடை சீஸன் தொடங்கியுள்ளதால் சந்தைகளுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மதுரை அழகர் கோவில் சாம்பிராணிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ் ணன் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் பெங்க ளூரா, நீலம், ஹிமாபசந்த், பங்கனப் பள்ளி, செந்தூரம் போன்ற மா ரகங் களில் ஓரளவு நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. மற்ற மாவட்டங் களில் விளைச்சல் குறைவுதான். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு வறட்சியால் மா ருசி அருமையாக இருக்கிறது.

மல்கோவா, அல்போன்சா, காளப்பாடி போன்றவை சராசரி விளைச்சல் கிடைத்துள்ளது. கோடை மழை பெய்ந்திருந்தால் இன்னும் விளைச்சல் அதிகரித்து இருக்கும். மல்கோவா 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விலை போகிறது. காளாப்பாடி 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விலை போகிறது. ஆனால், உற்பத்தி குறை வால் இந்த ரக பழங்கள் கடை களுக்கு வரவில்லை. ஹிமாபசந்த் 50 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விலை போகிறது.

நீலம் மாம்பழ சீஸன் ஜூன், ஜூலையில் ஆரம்பிக்கும். அந்த ரகம் காய் பருவத்திலேயே தற்போது இருக்கிறது. அதன் விளைச்சலைத் தற்போது சொல்ல முடியாது.

இன்னும் ஒரு வாரத்தில் ஜூஸ் கம்பெனியினர் பெங்களூரா மாம் பழங்களைக் கொள்முதல் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவர்கள் ஒரு லட்சம் டன், 50 ஆயிரம் டன், 10 ஆயிரம் டன் என மொத்தமாக கொள்முதல் செய்வார்கள். அவர்கள் கொள்முதல் செய்ய ஆரம்பித்தால் உள்ளூர் சந்தைகளில் பெங்களூரா தட்டுப்பாட்டால் விலை அதிகரிக்க ஆரம்பிக்கும். அதனால், 20-ம் தேதிக்கு மேல் மாம்பழங்களுக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பெங்களூரா ரக மா மரங் களைத்தான் விவசாயிகள் அதிக அளவு சாகுபடி செய்துள்ளனர். அதனால், இந்த பழங்கள் 15 ரூபாய்க்கு மேல் சென்றால் மட்டுமே விவசாயிகளுக்கு மா விவசாயத்தில் லாபம் கிடைக்கும். தற்போது இந்த பெங்களூரா பழங் கள் 9 ரூபாய்க்குத்தான் விற்கிறது.

பங்கனப்பள்ளி, மல்கோவா, ஹிமாபசந்த், செந்தூரம், பையூர் அல்போன்ஸா போன்ற மா ரகங்கள் சாகுபடி குறைவாகத்தான் இருக்கும். அதனால், இந்த பழங்கள் அதிகமான விலைக்கு விற்றாலும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு இல்லை. அதனால், எல்லா விவசாயிகளும் பெங்களூரா விலை ஏற்றத்தை நம்பியே காத்திருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x