Last Updated : 03 Apr, 2014 12:00 AM

 

Published : 03 Apr 2014 12:00 AM
Last Updated : 03 Apr 2014 12:00 AM

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பிடித்த கருணாநிதி மெய்க்காப்பாளரின் யோசனைகள்

கருணாநிதி முதல்வராக இருந்த போது அவரது மெய்க்காப்பாள ராக இருந்தவர் அடைக்கலம். தற்போது மீனவச் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக உழைத்துவரும் அடைக்கலம் தெரிவித்த பல யோசனைகள் திமுக-வின் 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக இடம்பெற்றுள்ளன. அடைக்கலம் ‘தி இந்து’-வுக்காக நம்மிடம் பேசியதாவது:

“கருணாநிதிக்கு மீனவர்கள் மீது எப்போதும் தனிப் பாசம் உண்டு. கடந்த 1989-ல் திமுக ஆட்சியில்தான் மீனவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அதன் பயனாக இன்று மருத்துவர்களாக, பொறி யாளர்களாக, விஞ்ஞானிகளாக மீனவர் சமுதாய இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

மண்ணெண்ணெய் மானியம்

மீனவர்கள் பயன்படுத்தும் நாட்டுப் படகுகளுக்கு மானிய விலையில் மாதம் 200 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என 2006-ல் திருச்செந்தூர் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி அறிவித்தார். 2010-ல் இந்தத் திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 25 வீதம் ஒரு படகுக்கு மாதம் 200 லிட்டர் வழங்கப்பட்டு வருகிறது.

மூன்றரை பக்கம்

மீனவர் நலன் குறித்து நான் அளித்த யோசனைகளைத் தலைவரும் தளபதியும் பரிசீலனை செய்து தற்போது 2014 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளனர். திமுக தேர்தல் அறிக்கையில் இந்த முறை மூன்றரை பக்கங்களுக்கு 5 தலைப்புகளில் மீனவர் நலன் குறித்த வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

இறப்பு சான்றிதழ் சிக்கல்

மீன் வளத்துறைக்கு தனி அமைச்சகம், மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை, மீனவர்களைப் பாதுகாக்க மத்திய அரசில் தனித் துறை உருவாக்குவது, கடற் கரைவாழ் மக்களுக்கான இயற் கைச் சீற்றப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவருவது, கடல் மேலாண்மை முறையைப் பின் பற்ற நடவடிக்கை, மீனவர்களை மீட்கக் கடற்கரைகளில் ஹெலி காப்டர் இறங்கு தளங்கள் அமைப் பது போன்றவை திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்.

இதில் முக்கியமாக, நடுக் கடலில் உயிரிழக்கும் மீனவர் களின் குடும்பங்கள் இறப்புச் சான் றிதழ் பெறுவதில் உள்ள சிரமங் களைப் போக்கி மீனவர் சங்கங் களின் பிரமாண வாக்குமூலத்தின் அடிப்படையில் இறப்புச் சான்றி தழ் வழங்கப்படும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

நடுக்கடலில் மீனவர்கள் காணா மல் போனால், அவர்கள் இறந்த தாகச் சான்றிதழ் பெறுவதற்கான காலம் 7 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனை 6 மாதமாகக் குறைக்க வேண்டும் என்கிற என் யோசனையை ஏற்று, 6 மாதம் என்றில்லாமல் சங்கங்களின் பிர மாண வாக்குமூலத்தின் அடிப் படையில் இறப்புச் சான்றிதழ் உட னடியாக வழங்க திமுக வலி யுறுத்தும் எனத் தேர்தல் அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத் தலைவராக என்னை நியமித்தார் கருணாநிதி. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதிக்கு சீட் கேட்டேன். ஜெனீபர் சந்திரன் அதிமுக-வுக்குச் சென்றுவிட்டதால் அந்த இடத்தை நிரப்ப மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த எனக்கு சீட் தர கருணாநிதி பரிசீலித்தார். ஆனால், கடைசி நேரத்தில் ஏ.டி.கே. ஜெயசீலனுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணிக்குழு வில் என்னையும் கருணாநிதி சேர்த்துள்ளார். மீனவச் சமுதாயத் தலைவர்கள், பிரதிநிதிகளைச் சந்தித்து மீனவர் நலனுக்காக இந்தத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை எடுத்துக் கூறி வருகிறேன்’’ என்றார்.

அன்று கருணாநிதியின் மெய்க்காப்பாளர்; இன்று மீனவ நண்பன்

தூத்துக்குடி மாவட்டம், ரோச் மாநகரம் என்ற மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம். 1966-ம் ஆண்டு முதல் காவல் துறையில் பணியாற்றிய அடைக்கலம், 1989-ல் சென்னையில் போக்குவரத்து ஆய்வாளராகப் பணியாற்றியபோது கருணாநிதியிடம் நெருங்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவரது திறமை மீது நம்பிக்கைகொண்ட கருணாநிதி 1989-ல் அடைக்கலத்தை மெய்க்காப்பாளராக நியமித்தார். சாதாரண எஸ்.ஐ. ஆகப் பணியைத் தொடங்கிய அடைக்கலம் கமாண்டோ படையின் எஸ்.பி. ஆக உயர்ந்து 2003-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பிறகு முழு நேர தி.மு.க உறுப்பினராக உள்ளார். தற்போது மீனவச் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக உழைத்துவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x