Published : 25 Feb 2014 12:00 AM
Last Updated : 25 Feb 2014 12:00 AM
சென்னையில் உள்ள 65 வங்கிகளில் சில்லறை மெஷின்கள் வைக்கப்பட்டுள்ளன. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை செலுத்தி 1, 2, 5 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம். இது பயனுள்ள வகையில் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
சென்னைவாசிகள் தினமும் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது சில்லறை பிரச்சினை. சிறிய பிரச்சினை என்றாலும் ரோட்டில் கட்டிப்புரள்கிற அளவுக்கு பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மாநகரப் பேருந்துகளில் பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் சில்லறைச் சண்டை என்பது வாடிக்கை. முட்டை வியாபாரிகளும் இந்த இம்சையை அனுபவிக்கிறார்கள்.
சில்லறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாடு முழுவதும் ‘காயின் வெண்டிங் மெஷின்களை’ ரிசர்வ் வங்கி அமைத்து வருகிறது. சென்னையில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்பட அரசு மற்றும் தனியார் வங்கிகளில் சில்லறை மெஷின் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, கிண்டி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் 65 மிஷின்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்கள் வெளியேற்ற இந்த மெஷினில் 3 துவாரங்கள் இருக்கின்றன. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை உள்ளே செலுத்தினால் அந்த துவாரங்கள் வழியாக சில்லறைகளை பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை அண்ணா சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சில்லறை எடுத்துக்கொண்டிருந்த சந்திரா கூறியது: என்னிடம் 4 நூறு ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருக்கிறது. பேருந்தில் 5 ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் கொடுத்து நடத்துநரிடம் அர்ச்சனை வாங்க முடியாது. பெட்டிக் கடையில் சில்லறை கேட்டதற்கு, ஐஓபி வங்கிக்குள் இருப்பதாக சொன்னார். ஒரே நொடியில் 100 ரூபாய்க்கு சில்லறை கிடைத்துவிட்டது. பொதுமக்கள் பார்வையில்படும்படி மெஷினை வைத்தால் நன்றாக இருக்கும்.
அண்ணா சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மக்கள் குறைதீர்ப்பு துணை பொது மேலாளர் சந்திரமோகன் கூறியது: வங்கிக்கு வருவோருக்கு காயின் வெண்டிங் மெஷின் பயனுள்ளதாக இருக்கிறது. நல்ல திட்டம் என்று பாராட்டுகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT