Last Updated : 05 Apr, 2017 05:18 PM

 

Published : 05 Apr 2017 05:18 PM
Last Updated : 05 Apr 2017 05:18 PM

துணை நிலை ஆளுநர் பதவி அரசியலமைப்பு ரீதியிலான பதவி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் பேட்டி

மாநில ஆளுநர் பதவிதான் அரசியலமைப்பு ரீதியிலான பதவி. துணை நிலை ஆளுநர் பதவி அரசியலமைப்பு ரீதியிலான பதவி கிடையாது.ஆனால் சபாநாயகருக்கான அதிகாரம் நாடு முழுவதும் பொதுவானது என புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் புகார் செய்ததை தொடர்ந்து நகராட்சி ஆணையர் சந்திரசேகரனை காத்திருப்போர் பட்டியலில் வைத்து புதிய ஆணையாளரை நியமிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவு பிறப்பித்தார். சபாநாயகர் உத்தரவை ஏற்று தலைமை செயலர் மனோஜ் பரிதா புதிய ஆணையராக கணேசனை நியமித்தார். சந்திரசேகனை காத்திருப்போர் பட்டியலில் வைத்தார். ஆணையர் கணேசன் பணி செய்ய சென்றபோது ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸ் அளித்த உத்தரவை காட்டி சந்திரசேகரன் மீண்டும் ஆணையராக பொறுப்பேற்றார்.

இந்த தகவல் சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு கிடைத்தது. இதையடுத்து டிஜிபி சுனில்குமார் கவுதமை அழைத்து தனது உத்தரவுப்படி பணியாற்ற சென்ற கணேசனுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்படியும், இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யும்படியும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று டிஜிபி சுனில்குமார், கவுதம் சபாநாயகரை அவர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்பின் சபாநாயகர் வைத்திலிங்கத்தை தொடர்பு கொண்டதற்கு, ஆணையர் விவகாரம் குறித்து தன் கருத்தை டிஜிபி வாய்மொழியாக கூறிவிட்டு சென்றுள்ளார். இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளேன் என்று குறிப்பிட்டார்.

தற்போதைய சூழல் தொடர்பாக சபாநாயகர் அளித்த பேட்டி.

அதிகாரிகளை சமூக வலைதளங்களில் துணைநிலை ஆளுநர் கடுமையாக விமர்சிக்கிறாரே?

சமூக வலைதள விமர்சனம் அவரைப் பின்பற்றும் சிலரை மட்டும்தான் சென்று சேரும். பத்திரிகைகளுக்கு என தனியாக தன் விமர்சனத்தை அனுப்பியுள்ளாரா? ஸ்டேட்டஸ் போடுவது அவர் விருப்பம், அதை நாம் தடுக்க முடியாது..

உங்கள் உத்தரவை செயல்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள்?

எனது உத்தரவை செயல்படுத்திய தலைமை செயலாளர் மீது ஆளுநர் நடவடிக்கை எடுத்தால் அப்போது நான் என்ன செய்கின்றேன் என்று பாருங்கள்.

யாருக்கு அதிகாரம் என்பது குறித்து தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி தெரிந்துகொள்ளும்படி துணைநிலை ஆளுநர் கூறியுள்ளாரே?

அவருக்கு தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகி தெரிந்துகொள்ளட்டும். இதுவரை அவர் கையெழுத்திட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஏன் அப்படி உத்தரவு தரவில்லை. அவர் கையெழுத்திட்டு உத்தரவு பிறப்பிக்கட்டும். அப்புறம் பார்க்கலாம்.

அரசியலமைப்பு சட்டப்படி தேர்வு செய்யப்பட்ட சட்டசபைக்கும், துணைநிலை ஆளுநருக்குமிடையே மோதல் உருவாகியுள்ளதே?

மாநில ஆளுநர் பதவிதான் அரசியலமைப்பு ரீதியிலான பதவி. துணை நிலை ஆளுநர் பதவி அரசியலமைப்பு ரீதியிலான பதவி கிடையாது. யூனியன் பிரதேச நிர்வாகி மட்டும்தான். ஆளுநருக்கு உள்ள அதிகாரம், துணை நிலை ஆளுநருக்கு கிடையாது. ஆனால் சபாநாயகருக்கான அதிகாரம் நாடு முழுவதும் பொதுவானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x