Last Updated : 29 Jun, 2017 10:37 AM

 

Published : 29 Jun 2017 10:37 AM
Last Updated : 29 Jun 2017 10:37 AM

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவிகளுக்கு கட்டாய அழைப்பு: பெற்றோர் சம்மதம் கேட்டு கல்லூரிகள் கடிதம்

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கல்லூரி மாணவிகளை அழைத்துச் செல்ல அனுமதி கோரி பெற்றோர்களிடம் கல்லூரிகள் சார்பில் ஒப்புதல் கடிதம் பெறப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா மதுரையில் பாண்டி கோவில் சுற்றுச்சாலை அம்மா திடலில் நாளை நடைபெறுகிறது. இவ்விழாவை தொடர்ந்து 32 மாவட்டங்களிலும், இறுதியில் சென்னையிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மதுரை விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறார். மதுரையில் இதற்கு முன்பு முதல்வர் பங்கேற்ற விழாவில் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை. இதனால் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பெருமளவில் கூட்டம் சேர்க்க அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஒவ்வொரு அரசு துறை சார்பிலும் ஆயிரம் பேர் வீதம் பயனாளிகளை தேர்வு செய்து விழாவுக்கு அழைத்து வர உத்தரவிடப்பட்டு அதற்காக அதிகா ரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நூற்றாண்டு விழாவில் அதிகளவில் கல்லூரி மாணவிகளை பங்கேற்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவுக்கு மாணவிகளை அதிகளவில் அழைத்து வருமாறு கல்லூரி நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதையடுத்து மாணவிகள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பெற்றோரிடம் ஒப்புதல் கேட்டு கல்லூரிகள் சார்பில் துண்டு சீ்ட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், எங்கள் கல்லூரியில் பயிலும் உங்கள் மகள் 30-ம் தேதி அம்மா திடலில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை பங்கேற்க உள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என கல்லூரி சார்பில் கூறப்பட்டுள்ளது. அதன் கீழ் தனது மகளை நூற்றாண்டு விழாவில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை பங்கேற்க ஒப்புதல் அளிக்கிறேன் எனக் குறிப்பிட்டு பெற்றோர் கையெழுத்திட்டு கல்லூரியில் சமர்பிக்க கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெற்றோர் ஒருவர் கூறும்போது, அரசியல் சார்புடைய விழாவுக்கு மாணவிகளை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது தவறு. அதுவும் மதியம் 3 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டியதுள்ளது. விழா முடிந்து போக்குவரத்து நெரிசல் சீராகி அங்கிருந்து வெளியேறவே நள்ளிரவு ஆகிவிடும். அதன் பிறகு கல்லூரிக்கு வந்து வீடுகளுக்கு திரும்ப அதிகாலை ஆகிவிடும்.

அரசியல் நிகழ்வுக்கு படிக்கும் மாணவிகளை வதைப்பது எந்த வகையில் நியாயம். மேலும் கூட்டங்களில் அசம்பாவிதம் நடைபெற்றால் மாணவிகளின் நிலை என்னவாகும். எனவே நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி, கல்லூரி மாண விகளை அழைத்துச் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x