Published : 25 Jan 2014 02:41 PM
Last Updated : 25 Jan 2014 02:41 PM

அனைத்து சமுதாயப் பேரியக்கம் ஏன்?- ராமதாஸ் விளக்கம்

அனைத்து சமுதாய பேரியக்கம் திடீரென தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு எடுத்தது போன்று ஊடகங்கள் செய்தி வெளியிடுவது சரியல்ல என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "பாதிக்கப்பட்ட சமுதாயங்களை ஒன்று திரட்டுவதும், அவர்களின் பிரச்சினைகளுக்கு அமைதி வழியில், சட்டத்திற்குட்பட்டு தீர்வு காண்பதும் தான் இந்த பேரியத்தின் நோக்கமாகும். பேரியக்கக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஊடகங்களுக்கும், அரசுக்கும் அனுப்புவதன் மூலம் சமுதாயங்களின் பிரச்சினைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீர்வு காணவும் முயன்று வருகிறோம்.

அனைத்து சமுதாயப் பேரியக்கம் சார்பில் இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இன்று வரை அரசியல், தேர்தல் தொடர்பான கருத்துக்கள் இடம்பெறவில்லை.

அனைத்து சமுதாய பேரியக்கத்தில் அங்கம் வகிக்கும் சில தலைவர்கள் ஏற்கனவே அரசியல் கட்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த கட்சிகளை ஒருங்கிணைத்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைமையில் ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, அதன்படி தான் சமூக ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டது. அந்தக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கடந்த 200-ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டத்திலும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது, அதற்கு முந்தைய கூட்டங்களில் தெரிவித்த அதே கருத்தை நான் மீண்டும் கூறினேன்.

அனைத்து சமுதாய பேரியக்கம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து கடைபிடிக்கப்படும் நிலைப்பாட்டைத் தான் நான் அப்போதும் தெரிவித்திருந்தேன். ஆனால், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற நிலைப்பாட்டை அனைத்து சமுதாய பேரியக்கம் திடீரென எடுத்தது போன்று ஊடகங்கள் செய்தி வெளியிடுவது சரியல்ல". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x