Published : 21 Mar 2014 10:35 AM
Last Updated : 21 Mar 2014 10:35 AM

மருத்துவ காப்பீட்டு வசதி கொண்ட 25 ஆயிரம் மருத்துவமனைகளின் பட்டியல் விரைவில் வெளியீடு

மருத்துவ காப்பீட்டு வசதி கொண்ட 25 ஆயிரம் மருத்துவமனைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்தின் (ஐ.ஆர்.டி.ஏ.) தலைவர் டி.எஸ்.விஜயன் தெரிவித்தார்.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் நீரிழிவு நோயாளிகள் பயன்பெறும் வகையில் ‘ஸ்டார் டயபீடிக் சேப்’ என்ற மேம்படுத் தப்பட்ட புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் அறிமுகவிழா சென்னையில் வியாழக்கிழமை நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐ.ஆர்.டி.ஏ. தலைவர் டி.எஸ்.விஜயன் பேசியதாவது:

தற்போது காப்பீட்டு துறையில் மருத்துவ காப்பீடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மருத்துவ காப்பீடு சார்ந்த புதிய திட்டங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ. அதிக ஒத்துழைப்பு அளித்து வருகிறது. காப்பீடு செய்துகொண்ட வாடிக்கை யாளர்களுக்கு அதன் பயன்பாடு தேவையான நேரத்தில் கிடைக்க வேண்டியது அவசியம். காப்பீட்டு நிறுவனங்களை விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வசதி இருப்பதால் சேவை சரியில்லை எனில் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறிவிடுவர்.

அதிர்ஷ்டசாலிகள் யார்?

பல ஆண்டுகளாக மருத்துவ காப்பீட்டுக்கு பிரிமீயம் செலுத்தி வருகிறோம். இதுவரை காப்பீட்டு வசதி எதையும் பயன்படுத்தவில்லை என்று சிலர் கூறலாம். சிகிச்சையோ அல்லது அறுவை சிகிச்சையோ செய்து அதற்கான செலவுத்தொகையை பெறக்கூடிய ஒரு நிலை உங்களுக்கு வரவில்லை என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

உண்மையில் நீங்கள்தான் அதிர்ஷ்டசாலிகள், அதோடு நீங்கள் செலுத்தும் பிரிமீயம் ஏதோ ஒரு நோயாளியின் மருத்துவ செலவுக்கு பயன்படுகிறது என்பதை நினைத்து ஆத்ம திருப்தி அடையலாம். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீட்டு வசதி கொண்ட 25 ஆயிரம் மருத்துவமனைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு டி.எஸ்.விஜயன் கூறினார்.

நீரிழிவு நோயாளிகளுக்கு

ஸ்டார் ஹெல்த் அலைடு இன்சூரன்ஸ் நிறுவன செயல் இயக்குநர் டாக்டர் எஸ்.பிரகாஷ், புதிய காப்பீட்டு திட்டம் குறித்து கூறுகையில், “புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 18 முதல் 65 வயது வரையுள்ள நிரிழிவு நோயாளிகள் சேரலாம். நோய் பாதித்த காலம், பாதிப்பு நிலை ஆகியவற்றை கருத்தில்கொள்ளாமல், எவ்வித முன்பரிசோதனையும் இன்றி சேர்க் கப்படுவர். நீரிழிவு சம்பந்தப்பட்ட அனைத்து மருத்துவ செலவி னங்களையும் இந்த திட்டம் உள்ளடக்கியது. உடல் உறுப்பு களை மாற்றக்கூடிய சூழல் ஏற்பட்டால் அதற்கான செலவும் ஏற்கப்படும். மேலும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், தானம் வழங்கு பவருக்கும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும்” என்றார்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் இயக்குநரும், சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் வெளியிட, நீரிழிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.மோகன் பெற்றுக்கொண்டார்.

டாக்டர் மோகன் பேசுகையில், “சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியத் தொகை கட்டணத்தில் சலுகை அளிக்கலாம்” என்று யோசனை தெரிவித்தார். முன்னதாக, ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு நர் வி.ஜெகநாதன் வரவேற்றார். நிறைவாக, துணைத்தலைவர் ஆனந்த் ராய் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x