Published : 15 Feb 2014 12:00 AM
Last Updated : 15 Feb 2014 12:00 AM
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ரூ.50 கோடியில் நீர்ப்பாசன உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் ராமகொண்டஅள்ளி, சுஞ்சல்நத்தம், நெருப்பூர் மற்றும் நாகமரை பகுதிகளில் வறட்சியைப் போக்க மத்தளப்பள்ளம் ஆற்றின் குறுக்கே 55.632 மில்லியன் கனஅடி நீரை சேமித்து வைக்க புதிய ஏரி அமைக்கும் திட்டத்துக்கு முதல்வர் ஜெயலலிதா 2005-ல் அடிக்கல் நாட்டினார். ரூ.14 கோடியில் அமைக்கப்பட்ட அந்த ஏரியை, வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் திறந்து வைத்தார்.
இதுபோல், திருவள்ளூர் மாவட்டம், ஜெகநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் செறிவூட்டுப் பெறவும், 0.12 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைத்திடவும், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 6 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கலிங்கல் அணையைத் திறந்துவைத்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், சித்தாத்தூர் கிராமம் அருகில் பாலாற்று பகுதியில் செல்லும் மோர் தானா வலதுபுறக்கால் வாய் பகுதியில் வெள்ளத்தினால் சேதமடைந்த கால்வாய் கட்டமைப்பினை நீக்க, 1.4 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றுடன் கூடிய உள்வாங்கி மேலேற்றும் கால்வாய் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.
மேலும், கடலூர் மாவட்டம், கீழப்பாலையூர், மருங்கூர், தேவங்குடி, காவனூர் மற்றும் பவழங்குடி ஆகிய வறண்ட பகுதிகளில் 1700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றிடவும் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள படுகை அணை, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், மு. நாகலாபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ள 165 ஆழ்துளை கிணறுகள் 271 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பொருட்டும், வைப்பாற்றின் குறுக்கே 5 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 320 மீட்டர் நீளம் கொண்ட தடுப்பணை ஆகியவையும் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.
இதுபோல், சிவகங்கை, திருவாரூர், திருச்சி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீரொழுங்கி, தடுப்பணை என மொத்தம் ரூ.49.99 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT