Published : 05 Nov 2013 11:41 AM
Last Updated : 05 Nov 2013 11:41 AM
மெரினா கடற்கரை சாலை விபத்தில் 3 பேர் பலியான வழக்கில், போதையில் காரை ஓட்டிய கல்லூரி மாணவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் காரில் வந்த மாணவரின் அக்காவையும் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 2-ம் தேதி தீபாவளி பண்டிகையன்று அதிகாலை சென்னை மெரினா கடற்கரை சாலை கலங்கரை விளக்கம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது தாறுமாறாக வந்த கார் மோதியது. இதில் போலீஸ்காரர் சேகர், மீன் வியாபாரி திலகவதி மற்றும் அர்ஜுனன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். காரில் இருந்தவர்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். தீபாவளி இரவு விருந்து...
புதுச்சேரி மாநிலம் வில்லியனூரைச் சேர்ந்த அன்பு - விமலா தம்பதியரின் மகள் ஆதிலட்சுமி (27). மகன் அன்புசூரியன் (22). ஆதிலட்சுமி திருமணமாகி சென்னை அடையாரில் வசிக்கிறார். அன்புசூரியன் லயோலா கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.காம் படிக்கிறார். அக்கா வீட்டில் தங்கி தினமும் கல்லூரி சென்று வருகிறார்.
அன்புசூரியனுக்கு அவரது தந்தை வாங்கிக் கொடுத்த கார்தான் விபத்துக்குள்ளாகி மூன்று பேர் பலியாகி விட்டனர். ஆதிலட்சுமி, அன்புசூரியன், நண்பர் கிரிஷ் ஆகிய மூன்று பேரும் தீபாவளிக்கு முதல் நாள் இரவு பாரிமுனையில் நடந்த ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு அதிகாலையில் காரில் வீடு திரும்பியபோதுதான் விபத்து நடந்துள்ளது. காரை அன்புசூரியன் ஓட்டியுள்ளார்.
கொலைக்கு சமமான வழக்கு...
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், போதையில் காரை ஓட்டிய அன்புசூரியன், அவரது நண்பர் கிரிஷ் ஆகியோரை கைது செய்தனர். அன்புசூரியன் மீது கொலை வழக்குக்கு சமமான சட்டப்பிரிவான இந்திய தண்டனைச் சட்டம் 304 ஏ(2) (உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுதல்) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைப் பெற்று வருகிறார். கைதான கிரிஷ், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெண்ணை கைது செய்ய முடிவு...
இதற்கிடையே, காரில் இருந்த ஆதிலட்சுமியும் குடிபோதையில் இருந்தாரா என்பதை உறுதி செய்ய அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறார் என்பது தெரிந்தும் தம்பியுடன் பயணம் செய்ததாகவும், போதையில் வாகனம் ஓட்டியதை ஊக்கப்படுத்தியதாகவும் ஆதிலட்சுமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரையும் ஓரிரு நாளில் கைது செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
போலீசுக்கு பாராட்டு...
இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு இரண்டு பேரை கைது செய்து, கடுமையான வழக்குகளை பதிவு செய்ததற்காக அண்ணா சதுக்கம் போக்குவரத்து ஆய்வாளர் தம்புசாமியை காவல் துறை அதிகாரிகளும் அரசு வழக்கறிஞர்களும் பாராட்டினர்.
போதையில் காரை ஓட்டிய அன்புசூரியன் உள்பட மூன்று பேருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
போதை டிரைவருடன் செல்பவரும் கைது...
விபத்து வழக்குகளில் வழக்கமாக வாகனம் ஓட்டுபவர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படும். மெரினாவில் மூன்று பேரை பலி கொண்ட விபத்தில் முதல்முறையாக காரில் இருந்த அக்கா, நண்பர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: போதையில் வாகனம் ஓட்டுவது குற்றம். அவருடன் பைக்கிலோ, காரிலோ செல்வதும் சட்டப்படி குற்றம்தான். போதையில் வாகனம் ஓட்டுபவருடன் சென்றால், அது அவரை ஊக்கப்படுத்துவதாகிவிடும். இதன்மூலம், அவர் குற்றம் செய்வதற்கு நீங்களும் உடந்தையாக இருந்ததாக அர்த்தம். போதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் செல்பவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். ஆதிலட்சுமி, கிரிஷ் மீது இந்த பிரிவுகளின்கீழ்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தினமும் இரவு 9 முதல் 1 மணி வரை போலீஸார் தீவிர சோதனை நடத்தி, போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கின்றனர். இனிமேல் அவர்களுடன் வருபவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT