Published : 03 Jan 2014 01:28 PM
Last Updated : 03 Jan 2014 01:28 PM
ராமேஸ்வரம் தீவு நாட்டுப் படகு மீனவர்கள் தொடர்ந்து நான்காவது வெள்ளிக்கிழமையும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பனைச் சார்ந்த 18 நாட்டுப் படகு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவத்தை கண்டித்து ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் படகுகள் ஆழம் குறைந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சிறைபிடிக்கப்பட்ட பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 18 பேரை விடுதலை செய்யக் கோரி இன்று முதல் பாம்பன் மற்றும் ராமேசுவரம் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 600 படகுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் குதித்தனர். படகுகள் அனைத்தும் கடற்கரை ஓரம் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளது. 3 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் தீவு மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தை தொடர்ந்து வியாழக்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாம்பனில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர்.
நாட்டுப் படகு மீனவர்களின் தொடர்வேலை நிறுத்ததை தொடர்ந்து மீன் சந்தையில் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 200 ரூபாய் வரையிலும் விற்று வந்த விலை மீன் தற்போது ரூ 300 வரையிலும் விற்க்கப்படுகின்றது. ரூ. 80 க்கு விற்ற சூடை முன் ரூ 100க்கும், ரூ. 160க்கு விற்று வந்த நகரை மற்றும் சூவாரை மீன்கள் ரூ 200ஐ எட்டிப் பிடித்தது.
அடுத்தகட்டமாக மீனவர்கள் ஜனவரி 9ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், அதனைத் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டமும் நடத்த ஆயத்தமாகி உள்ளனர்.
இதுகுறித்து நமது செய்தியாளரிடம் பேசிய மீனவர் பிரதிநிதி ராயப்பன் கூறியதாவது,
''தொடர்கதையாக நடைபெற்று வரும் மீனவர்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கு இரு நாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கை சிறைகளில் வாடுகின்ற தமிழக மீனவர்களையும், இந்தியச் சிறைச்சாலைகளில் உள்ள இலங்கை மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்.
இரு நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.
அடுத்தகட்டமாக மீனவர்கள் ஜனவரி 9ம் தேதி மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டமும், அதனைத் தொடர்ந்து ரயில் மறியல் போராட்டமும் நடத்த ஆயத்தமாகி உள்ளோம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT