Published : 06 Apr 2017 09:53 AM
Last Updated : 06 Apr 2017 09:53 AM
தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்பட்டதை அடுத்து ஏற்கெனவே உருவாக்கப்பட்ட வீட்டுமனைகள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. கடந்த 8 மாதங்களாக வெறிச்சோடி காணப்பட்ட பத்திரப் பதிவு அலுவலகங்கள் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளன.
தமிழகத்தில் விவசாய நிலங் களை வீட்டுமனைகளாக மாற்ற வும் அங்கீகாரமற்ற நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்படும் போது அதனை பதிவு செய்யவும் தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பொதுநலன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு, ‘விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றவும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை பத்திரப் பதிவு செய்யவும் தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி உத்தரவிட்டது.
இதனால் தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு ஸ்தம்பித்தது. பரபரப்புடன் காணப்படும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடின. ரியஸ் எஸ்டேட் தொழில் முடங்கியது. இந்நிலையில், இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோர் முன்பு மார்ச் 28-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர், பத்திரப் பதிவுக்காக விதிக்கப்பட்ட தடையில் தளர்வு செய்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ம் தேதி அரசு வெளியிட்ட அரசாணைக்கு முன்னர் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப் பதிவு செய்திருந்தால், அதனை மீண்டும் விற்க, வாங்க விரும்பினால் அதனை மறு பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம் என்றும், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை புதிதாக பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் 20.10.2016-க்கு முன்னர் வீட்டுமனையாக பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளைப் பொறுத்தவரை நீதிமன்ற உத்தரவின்படி எந்த விதிமீறல் களும் இல்லாமல் பதிவு செய்ய அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள், அனைத்து மாவட்டப் பதிவாளர்கள், அனைத்து சார் பதிவாளர்களுக்கும் மார்ச் 31-ம் தேதி பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார்.
இதனால் மார்ச் 3-ம் தேதி யில் இருந்து பத்திரப் பதிவு அலு வலகங்கள் மீண்டும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. பத்திரப் பதிவு செய்ய கூட்டம் அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு விற்பனையாகாமல் புதர் மண்டி காணப்படும் வீட்டுமனைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. வீ்ட்டுமனைகளில் உள்ள புதரை அகற்றி, புதிதாக எல்லைக் கற்களை நட்டு புதுப்பித்து வருகின்றனர்.
பிளாட் விலை உயரவில்லை
இது தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கூறும்போது, ‘‘வீட்டுமனைகள் பதிவு மீண்டும் தொடங்கியுள்ளது. இருப்பினும் பிளாட் விலை உயரவில்லை. யாரிடமும் எதிர்பார்த்த அளவுக்கு பணம் இல்லை. உயர் நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவு தற்காலிகமானதுதான். அரசின் விதிமுறைகள் எப்படி வேண்டு மானாலும் இருக்கலாம்.
விதி முறைகள் மாறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், ஏற்கெனவே போட்ட பிளாட்களை வந்த விலைக்கு விற்று முதலீட்டை எடுக்க முடிவு செய்துள்ளோம். காலியிடங்களை இனிமேலும் விற்காமல் வைத்திருப்பது புத்தி சாலித்தனம் அல்ல. இனிமேல் பிளாட் விலை உயர வாய்ப்பே இல்லை. எனவே மனைகளை விற்று பணமாக்குவதுதான் நல்லது. இதற்காக இடம் வாங்க வரு வோருக்கு இடத்தின் மீது பிடித்தம் ஏற்படுவதற்காக பிளாட்களை புதுப்பித்து வருகிறோம்” என் றார்.
பத்திரப் பதிவு ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘‘பத்திரப் பதிவு அலுவலகங்கள் 8 மாதங்களாக வெறிச்சோடி கிடந்தன. பத்திரப் பதிவு மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.8000 கோடி வருவாய் கிடைக்கும். நீதிமன்ற தடையால் 10 சதவீத வருவாய் மட்டுமே கிடைத்தது. தற்போது மீண்டும் பத்திரப் பதிவு விறுவிறுப்படைந்துள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT