Published : 02 Dec 2016 07:50 AM
Last Updated : 02 Dec 2016 07:50 AM
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வெடிபொருள் தயாரிப்பு நிறுவனத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தொழிலாளர்கள் 18 பேர் உயிரி ழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
துறையூர் வட்டம், உப்பிலிய புரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது தளுகை முருங்கப்பட்டி. பச்சை மலை அடிவாரப் பகுதியான இங்கு சுமார் 250 ஏக்கரில், வெற்றி வேல் வெடிபொருள் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இது மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
இங்கு கிணறு, கல் குவாரிகளில் பயன்படுத்தப்படும் வெடிபொருள் தயாரிக்கப்படுகிறது. இந்த வெடிபொருளின் திரிக்கான வெடி மருந்தைத் தயாரிக்கும் பணி அங்குள்ள யூனிட்-2 கட்டிடத்தில் நடைபெற்று வந்தது. இந்தக் கட்டிடத்தில் நேற்று காலை திடீரென பெரும் சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது சுற்றுவட்டாரத்தில் 1 கி.மீ. சுற்றள வுக்கு அதிர்வு உணரப்பட்டதா கவும், சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு சத்தம் கேட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேரிட்டபோது, யூனிட்-2 கட்டிடத்தில் ஆபரேட்டர்கள் முருங்கப்பட்டி நகுலேசன், நாகநல்லூர் கார்த்திக், தொழிலாளர்கள் பாதர்பேட்டை ரவீந்திரன், நாகநல்லூரைச் சேர்ந்த ராஜபிரகாசம், மேற்பார்வையாளர் பிரதீப் ஆகியோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், யூனிட்-2 கட்டிடத்தில் சேகரமான வெடி மருந்துகளைக் கையாள்வதற்காக முருங்கப்பட்டி ரவிச்சந்திரன், சதீஷ்குமார், கொப்பம்பட்டி சீனிவாசன், சம்பத், செந்தாரப்பட்டி பூபதி, பேக்கிங் யூனிட் மேற்பார்வையாளர் முருகன், வெங்கடாஜலபுரம் ஆனந்தன், செல்வக்குமார், சேலம் மாவட்டம் செங்காடு செல்வக் குமார், பாதர்பேட்டை சுப்பிரமணி உள்ளிட்டோர் அங்கு இருந்துள் ளனர் என்று கூறப்படுகிறது.
20 அடி ஆழ பள்ளம்
இந்த வெடி விபத்தில், முதல் தளத்துடன் கூடிய கட்டிடம் (யூனிட்-2) இடிந்து முற்றிலும் தரைமட்டமானதுடன், சுமார் 20 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. கட்டிடத்தின் கட்டுமான பாகங்கள் சுமார் 250 மீட்டர் தொலைவு வரை ஜல்லிக்கற்கள்போல பரவிக் கிடந்தன. வெடி விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து சுமார் 200 மீ தொலைவில் அடையாளம் காண முடியாத அளவில் 2 பேரின் சிதைந்த உடல் பாகங்கள் கிடந்தன.
மேலும், வெடி மருந்து வளாகம் முழுவதும் சிதைந்த நிலை யில் மனித உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. யூனிட்-2 கட்டிடத்தில் பணியில் இருந்ததாகக் கூறப்படும் ஒருவரையும் அங்கு உயிருடன் காண முடியவில்லை. இதனால் 18 பேர் உடல் சிதறி பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத் தில் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனி சாமி, மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, திருச்சி சரக டிஐஜி அருண், மாவட்ட எஸ்பி செந்தில் குமார், அரியலூர் மாவட்ட எஸ்பி அனில்குமார் கிரி ஆகியோர் விரைந்து வந்து, விபத்து ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT