Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM

டென்மார்க் தொழில்நுட்பத்துடன் குறிஞ்சிப்பாடியில் நிலத்தடி நீர் ஆய்வு

மத்திய நிலத்தடி நீர் வாரியம், நிலத்தடி நீர் மட்டத்தின் அளவை டென்மார்க் நாட்டு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆய்வு செய்துவருகிறது.

மத்திய நிலத்தடி நீர்வள அமைச்சகத்தின் முக்கிய பணி நீராதார வரைபடம் தயாரிக்கும் ஆய்வாகும். அதன்படி கடலூர் மாவட்டத்தில் 428 சதுர கி.மீ பரப்பளவில் இந்த ஆய்வு டென்மார்க் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஹெலிகாப்டர் மூலம் முதன்முதலாக தொடங்கப் பட்டுள்ளது. இதற்காக டென்மார்க்கைச் சேர்ந்த 5 பொறியாளர்கள், மத்திய நிலத்தடி நீர் வாரிய அலுவலர்களுடன் இணைந்து குறிஞ்சிப்பாடியை அடுத்த பெத்தநாயக்கன் குப்பத்தில் நிலத்தடி நீர் குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.

இது தொடர்பாக தி.இந்து நிருபரிடம், புவியியல் வல்லுநர்கள் கூறியதாவது, “இப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள நிலத்தடி மண்ணின் கடினத் தன்மை குறைவாக இருப்பதுதான் காரணம். நிலத்தடி நீரைப் பற்றி சாதாரண மனிதர்களும் அறிந்துகொள்ளும் வகையில், கிராமக் குழுக்கள் ஏற்படுத்தி, அவர்களிடம் நிலத்தடி நீரின் அளவையும், அதன் பயன்பாட்டு முறையும் தெரிவிப்பது; அதை யடுத்து அவர்களாகவே நிலத் தடி நீரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்’’ என்றனர்.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகேதான் என்எல்சி சுரங்கம் தோண்டுகிறது. மேலும் சென்னைக்கு இப்பகுதியில் இருந்துதான் ஆழ்துளைக் கிணறு மூலம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. எனவே நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனரே என்ற போது, என்எல்சி சுரங்கத்தினாலும், சென்னைக்கு தண்ணீர் எடுப்பதனாலும் உறிஞ்சப்படும் நீரைக் காட்டிலும் விவசாயிகள் ஆழ்துளைக் கிணறு அமைத்து எடுக்கும் நீரின் அளவு அதிகம். இருப்பினும் மழை சரியாக பெய்துவருவதால், இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் குறையவில்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x