Last Updated : 01 Jul, 2016 08:06 AM

 

Published : 01 Jul 2016 08:06 AM
Last Updated : 01 Jul 2016 08:06 AM

சேலத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை, கற்குவை கண்டுபிடிப்பு

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே எருமைநாயக்கன் பாளையத்தில் உள்ள பொன்சொரி மலையில் 2,500 ஆண்டுக்கு முற்பட்ட கல்திட்டை, கற்குவை இருப்பதை சேலம் வரலாற்று சங்கம் மற்றும் சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

சேலம் மாவட்ட வரலாற்று தேடல் குழு மற்றும் வரலாற்று சங்கத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன், தொல்லியல் ஆர்வலர்கள் ஆறகழூர் பொன்.வெங்கடேசன், கலைச்செல்வன், சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான 20 பேர் கொண்ட குழுவினர் சேலம் மாவட்டம் எருமைநாயக்கன் பாளையத்தில் உள்ள பொன்சொரி மலையில் களஆய்வு செய்தனர்.

தாமரைப்பாழி சுனை

அப்போது, அம்மலையில் 2,250 அடி உயரத்தில், ‘தாமரைப்பாழி’ என்ற சுனைக்கு அருகே ஒரு கல்திட்டை மற்றும் கற்குவை இருப்பதை கண்டறிந்தனர். இதுகுறித்து நடத்திய ஆய்வில், அவை சுமார் 2,500 ஆண்டுக்கு முற்பட்ட சங்ககாலத்துக்கு முந்தைய பெருங்கற்காலத்தை சேர்ந்தவைகள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன் மற்றும் ஆறகழூர் பொன்.வெங்கடேசன் கூறியதாவது:

பெருங்கற்காலத்தில் குறுநில மன்னர்கள், படை தளபதிகள், படைப்பிரிவில் சிறப்புற இயங்கி, எதிரிகளை திணறடித்து ஓட ஓட விரட்டிய மாவீரர்கள் மற்றும் அரசு பொறுப்பில் முக்கிய பங்காற்றிய பிரமுகர்கள் இறந்தால், அவர்களை பூமியில் குழிதோண்டி புதைத்துவிட்டு நான்கு புறமும் பலகை கற்கள் வைத்து, மேற்புறமும் ஒரு பலகை கல்லால் மூடி புறா கூண்டுபோல் அமைத்துவிடுவர். இதில் அவர்கள் நினைவாக அவர்கள் பயன்படுத்திய சில பொருட்களையும் வைத்து அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது.

உடல் அடக்கம்

இந்த முறைக்கு கல்திட்டை என்று பெயர். இங்கு காணப்படும் இந்த கல்திட்டை ஒரே பலகைக்கல்லால் அமைக்கப்படாமல் சிற்சில துண்டுகற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வடபுறம் உள்ள பக்கவாட்டுகல்லும் மூடும் கல்லும் சிதைக்கப்பட்டுள்ளன. மூடுகற்கள் 5 துண்டுகற்களால் மூடப்பட்டுள்ளது.

பழங்காலத்தில் இறந்தவர்களை புதைக்க கல்பதுக்கை, கல்திட்டை, கல்வட்டம், ஈமப்பேழை, கல்குவை, முதுமக்கள்தாழி போன்ற முறைகளை பயன்படுத்தி உள்ளதை வரலாற்று ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி யுள்ளனர்.

பெருங்கற்காலம்

இதுபோன்ற கல்திட்டை ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அம்மன் மலையில் கல்திட்டையும், இருபது அடி தொலைவில் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு கற்குவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெருங்கற்காலத்தில் இறந்தவர் களை பூமியில் புதைத்து மூடிவிட்டு அந்த இடத்தை அடையாளப்படுத்த கூம்பு வடிவில் கற்களை அடுக்கி வைப்பது, கற்குவை என்று அழைக்கப்படுகிறது. 5 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட எகிப்து பிரமிடுகள் இன்றளவும் போற்றி காப்பாற்றப்பட்டு வரும்நிலையில், தமிழகத்தில் பழங்கால புரதான சின்னங்கள் பல இடங்களில் கேட்பாரின்றி கிடக்கிறது. இதுபோன்ற அரிய பொக்கிஷங்களை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

நினைவுச் சின்னம்

இதுகுறித்து தமிழ்நாடு தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் ர.பூங்குன்றன் கூறியதாவது:

பெருங்கற்காலத்தில் அரசர்கள், குறுநில மன்னர்கள், படை தளபதிகள், மாவீரர்கள் மறைவை நினைவு கூறும் விதமாக நடுகற்கள் ஏற்படுத்தி, அவர்கள் புகழை காலத்தால் அழியாத வகையில் நினைவுச் சின்னமாக போற்றி காத்து வந்துள்ளனர். இன்றளவும், ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தஞ்சை பெரிய கோயில் உள்ள புராதன சின்னங்களில் உள்ள கல்வெட்டுகள் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்கிறோம்.

தற்போது, சேலம் மாவட்டத்தில் பொன்சொரி மலையில் வரலாற்று தேடல் குழுவினர் கண்டு பிடித்துள்ள 2,500 ஆண்டுக்கு முற்பட்ட கற்குவை, கல்திட்டை தொல்லியல் துறை மூலம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால், மேலும், பல புதிய தகவல்கள் கிடைக்கும்.

கற்பிக்க உத்தரவு

கடந்த 1976-ம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது, பழங்கால சின்னங்களை பாதுகாக்க அந்தந்த பகுதியில் கிடைக்கும் சின்னங்களை அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் எடுத்து வந்து பாதுகாத்து, குழந்தைகளுக்கு, வரலாற்று சம்பவங்களை கற்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

காலப்போக்கில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வராமலே போனதால், பழங்கால புராதன சின்னங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதே தொல்லியல் துறை மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x