Published : 09 Oct 2014 08:51 AM
Last Updated : 09 Oct 2014 08:51 AM

கல்பாக்கம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்: துப்பாக்கிச் சூட்டுக்கு மன அழுத்தம் காரணமா?

>கல்பாக்கத்தில் சக வீரரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வீரர்கள் மூவரில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். துப்பாக்கிச் சூட்டில் முதலில் பலியான தலைமை காவலர் மோகன்சிங் ராஜஸ்தான் மாநிலம் யாசகிங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இங்கு பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தவிர மற்ற இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கூடுதல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கணேசன் சேலம் மாவட்டம் களவாய் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 2011-ம் ஆண்டு முதல் இங்கு பணியில் இருந்தார். மற்றொரு வீரரான தலைமை காவலர் சுப்புராஜ் மதுரை மாவட்டம் சின்னாரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்து, அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியது.

அய்யணன் கமலம்மாள் தம்பதியின் மகனான சுப்புராஜின் மனைவி லலிதா. மகன் தர்மராஜ் (பொறியியல் பட்டதாரி). சுப்பு ராஜ் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் சின்னாரெட்டியில் உள்ள பெற்றோ ருக்கு நேற்று காலை 7 மணியளவில் கிடைத்தது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு பின் இவரது உடல் கல்பாக்கம் கொண்டு வரப்பட்டு, அங்கு பாதுகாப்புப் படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது உடல் அடக்கத்துக்காக சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அதேபோல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் கணேசனின் சொந்த ஊரான தளவாய்பட்டி நடுப்பட்டி கிராம மக்களும் சோகத்தில் மூழ்கினர். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர் களுக்கு 2 மகள்களும், மகனும் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. பலியான கணேசன் 30 ஆண்டுகளாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையில், காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

காயமடைந்த வீரர்கள்

மேலும் துப்பாக்கிச்சூட்டில் காய மடைந்த காவலர் கோவர்தனன் பிரசாத் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லம்பாடி கிராமத்தை சேர்ந்தவர். மற்றொரு வீரரான பிரதாப்சிங் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

போலீஸ் விசாரணை

கல்பாக்கத்தில் 3 வீரர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான விஜய்பிரதாப்சிங் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

இவர் உத்திரபிரதேச மாநிலத் தின் அலகாபாத் மாவட்டம், கர்ஸான கிராமத்தை சேர்ந்தவர். 1990-ல் தொழில்பாதுகாப்பு படை வீரராக பணியில் சேர்ந்தார். மத்தியப்பிரதேசத்தில் காவலராக பணியாற்றிய நிலையில், பாது காப்பு படை வீரராக பதவி உயர்வு பெற்று கடந்த ஜூலை மாதம் கல் பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக 15 நாட்கள் விடுமுறை கேட்டதாக வும் இவரது உயர் அதிகாரி மோகன் சிங் விடுமுறை அளிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், விஜய்பிரதாப் சிங் மத்தியபிரதேசத்தில் பணியில் இருந்தபோது அவருடன் மோகன் சிங்கின் நண்பர்கள் சிலர் பணி யாற்றியுள்ளனர். கல்பாக்கத்தில் விஜயபிரதாப்சிங் பணிக்கு சேர்ந்த வுடன் அவரைப்பற்றி மோகன்சிங் கிடம் அவதூறு கூறியதுடன் அவருக்கு எதிராக செயல்படுமாறு கூறியுள்ளனராம். இதனால் மோகன் சிங், சீனியர் வீரர்களுடன் சேர்ந்து கொண்டு விஜய்பிரதாப்சிங்கை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்தாராம்.

விடுமுறை அளிக்காததால் ஏமாற்றத்தில் இருந்த விஜய் பிரதாப்சிங்குக்கு கேலியும் கிண்ட லும் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. இதனால் மனஅழுத்தத்துக்கு ஆளான அவர் ஆத்திரமடைந்து மோகன்சிங்கை துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேசன், சுப்புராஜ் மற்றும் காயமடைந்த கோவர்தனன் பிரசாத் மற்றும் பிரதாப்சிங் ஆகி யோர் மீது எதிர்பாராதவிதமாக குண்டுகள் பாய்ந்ததாக கூறப் படுகிறது.

விஜய் பிரதாப்சிங் பயன்படுத்திய துப்பாக்கி 182 மீட்டர் வரை குண்டு பாயும்

கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வீரர்களுக்கு ‘SUB MACHINE GUN CARBINE 9 mm 1A1' ரக துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கியை பயன்படுத்திதான் 3 பேரை சுட்டுக்கொன்றுள்ளார் விஜய் பிதாப்சிங். இரண்டரை அடி நீளத்தில் 3.6 கிலோ எடையில் இருக்கும் இந்த துப்பாக்கி மேகஸினில் (குண்டுகள் வைக்கும் இடம்) 20 குண்டுகள் இருக்கும். துப்பாக்கியின் ஸ்டிரிக்கரை 8 விநாடிகள் அழுத்தி பிடித்து வைத்தால் 20 குண்டுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வெளியேறும். இவை 183 மீட்டர் வரையுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறனுள்ளவை.

சிஐஏஎப் வீரர்கள் பயன்படுத்தும் இந்த துப்பாக்கிகள் கொல்கத்தாவில் உள்ள மத்திய துப்பாக்கி தொழிற்சாலையில் கடலின் உப்பு காற்றால் பாதிக்கப்படாத வகையில் தயாரிக்கப்படுகின்றன. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 20 குண்டுகள் வீரர்களின் மேல் பாய்ந்துள்ளது. இதில், காயமடைந்தவர்கள், இறந்தவர்களின் உடல்கள் மற்றும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் இருந்து 19 குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ஒரு குண்டை காணவில்லை. இதை போலீஸார் தேடி வருகின்றனர். துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்ததால்தான் மற்ற வீரர்களால் விஜய்பிரதாப்சிங்கை மடக்கி பிடிக்க முடிந்தது. அவரின் பேண்ட் பெல்ட்டில் கூடுதலாக இருந்த 40 குண்டுகளையும் அவர் பயன்படுத்தியிருந்தால், மேலும் சில வீரர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி இருப்பார்கள் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x