Published : 07 Oct 2013 05:32 PM
Last Updated : 07 Oct 2013 05:32 PM
வேலூரில் டாக்டர் அரவிந்த் ரெட்டி, இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் உள்ளிட்ட 5 பேரை கொலை செய்ததாக போலீஸ் பக்ருதீன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை போலீஸ் பக்ருதீன் கைது செய்யப் பட்டார். புத்தூரில் பதுங்கி இருந்த மற்ற இருவரும் சனிக்கிழமை கைது செய்தனர். பின்னர் பக்ருதீனை வேலூர் ஜேஎம் 3 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவக்குமார் முன்னிலையில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர்.
அப்போது மாஜிஸ்திரேட்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2012 அக்டோபர் மாதம் வேலூரில் பா.ஜ.க. மருத்துவரணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, பரமக்குடியில் முருகன் என்ற முருகேசன், மதுரையில் சுரேஷ், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்குடன் சேர்ந்து கொலை செய்ததாக விசாரணையில் போலீஸ் பக்ருதீன் ஒப்புக்கொண்டார். அவர் பதுங்கி இருந்த வீட்டிலிருந்து வெடி மருந்துகள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது கூட்டாளிகள் குறித்து விசாரிக்க வேண்டி இருப்பதால் அவரை 13 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.
"13 நாள் வேண்டாம் சார்" என்று பக்ருதீன் சொன்னார். மாஜிஸ்திரேட் வரும் 11-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
பக்ருதீனிடம் தனித்தனியாக விசாரிக்க டி.எஸ்.பி. மதிவாணன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டாக்டர் அரவிந்த் ரெட்டி, பரமக்குடி முருகன் வழக்குகளும் விரைவில் சிபிசிஐடி வசம் மாற்றப்படும் என்று தெரிகிறது. சிபிசிஐடி டிஜிபி நரேந்திரபால்சிங்கும் வேலூரில் முகாமிட்டுள்ளார்.
கர்நாடக போலீசார் வருகை
பக்ருதீன் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், பெங்களூர் பாஜக அலுவலகம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பு குறித்து விசாரிக்க பெங்களூர் மாநகர காவல் துறையின் இணை கமினர் ஹேமந்த் தலைமையிலான ஐந்து காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தனர். சென்னை போலீசார் உதவியுடன் வேலூர் சென்று மூன்று மணி நேரம் பக்ருதீனிடம் விசாரணை நடத்தினர்.
தலைமை பதவிக்கு பக்ருதீன்-சித்திக் போட்டி
கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு உட்பட தமிழகத்தில் பல தீவிரவாத சம்பவங்களை அரங்கேற்றிய தீவிரவாதி இமாம்அலி 2002ம் ஆண்டு காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இமாம் அலியின் வலது கையாக இருந்தவர்கள் அபுபக்கர் சித்திக் மற்றும் போலீஸ் பக்ருதீன். இமாம் அலி மரணத்திற்கு பின்னர் தலைமை பொறுப்பை பிடிப்பதில் அபுபக்கர் சித்திக், போலீஸ் பக்ருதீன் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரை இணைத்துக் கொண்டு போலீஸ் பக்ருதீன் தனியாக செயல்பட ஆரம்பித்தார். இதனால் அதிருப்தியடைந்த சித்திக், அவர்களை விட்டுப்பிரிந்து தனியாக செயல்பட ஆரம்பித்து விட்டார்.
வெடிகுண்டுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற சித்திக், தற்போது வடஇந்தியாவில் ஒரு தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறாராம்.
மும்பை காவல் துறையால் ஒருமுறை கைது செய்யப்பட்ட சித்திக்கை அடையாளம் தெரியாமல் விடுவித்துள்ளனர். அவருக்கு இப்போது 53 வயதாகிறது. ஆனால் 22 வயதில் எடுக்கப்பட்ட ஒரு ஸ்டாம்ப் சைஸ் புகைப்படத்தை வைத்து கொண்டு தேடி வருகின்றனர் காவல் துறையினர். இன்று வரை அபுபக்கர் சித்திக்கின் கைரேகை பதிவுகளோ, புகைப்படங்களோ யாருக்கும் கிடைக்கவில்லை.
சித்திக் அனுப்பிய புத்தக குண்டு
1995 ம் ஆண்டு நாகூரில் இந்து முன்னணி பிரமுகர் தங்கமுத்து கிருஷ்ணனை கொலை செய்வதற்காக புத்தக பார்சலில் குண்டு வைத்து அனுப்பினார் சித்திக். பார்சலை வாங்கி பிரித்த அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல, மயிலாடுதுறையில் இந்து அமைப்பை சேர்ந்த ஜெகவீர பாண்டியன் என்பவரை கொலை செய்வதற்கும், அபுபக்கர் சித்திக் புத்தக குண்டுகளை அனுப்பினான். ஆனால், தபால் நிலையத்தில் வைத்தே கண்டுபிடித்து புத்தக குண்டு செயல் இழக்க வைக்கப்பட்டது. சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வீசிய வழக்கும் அபுபக்கர் சித்திக் மீது உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT