Last Updated : 04 Jun, 2016 11:56 AM

 

Published : 04 Jun 2016 11:56 AM
Last Updated : 04 Jun 2016 11:56 AM

பாடத் திட்டம் இல்லாமல் நீதிபோதனை வகுப்புகள் நடத்த முடியுமா?- குழப்பத்தில் ஆசிரியர்கள்

மாணவர்களை நல்வழிப்படுத்த நீதிபோதனை வகுப்புகளை ஆசிரியர்களே நடத்த வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான பாடத் திட்டமும், துணைப் பாடப் பகுதியும் இல்லாமல் எப்படி சொந்தமாக கதைகளைச் சொல்லி பாடம் நடத்த முடியும் என கேள்வி எழுப்புகின்றனர் ஆசிரியர்கள்.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை மூலம் முன்பு வழங்கப்பட்டு வந்த மொழிப்பாட புத்தகங்களில் துணைப் பாடம் என்ற பிரிவு இருந்தது. நன்னெறி நீதிக் கதைகள் கொண்ட துணைப் பாடம், மாணவர்களை நல்வழிப்படுத்தும் எனக் கருதப்பட்டது. ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தில் துணைப் பாடப் பகுதிகள் நீக்கப்பட்டு, பாடங்களுடன் இணைந்த நன்னெறிக் கதைகள் இல்லாத நிலை ஏற்பட்டது.

இந் நிலையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நீதிபோதனை வகுப்புகளை நீதிபோதனை வகுப்புகளாகவே நடத்த வேண்டும், வேறெந்த வகுப்பாகவும் நடத்தக்கூடாது. நீதிபோதனை வகுப்புகளுக்குச் செல்லும் ஆசிரியர்கள், நல்ல கதைகள், கருத்துகளை தாங்களே தயார் செய்து மாணவர் களுக்கு கற்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் குழப்பம் நிலவுகிறது.

துணைப் பாடத்தை நீக்கிவிட்டு, பாட இணைச் செயல்பாடுகளுக்கு தனியே பாடத் திட்டம் தயார் செய்து வழங்காமல், நன்னெறிக் கதைகளையும், கருத்துகளையும் ஆசிரியர்களே தயார் செய்து கற்பிக்க வேண்டுமென்பது சரியான நடைமுறையல்ல என கருத்து தெரிவிக்கின்றனர்.

துணைப் பாடம் தேவை

கலையாசிரியர்கள் சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறும்போது, ‘ஒவ்வொரு வகுப்புக்கும், மாணவர்களின் ஏற்றுக் கொள்ளும் திறன், வயது ஆகியவை அடிப்படையில் பாடத்திட்டத்தின் படி துணைப் பாட நீதிக்கதைகள் இருக்கும். துணைப் பாடம் நீக்கப்பட்டபின், விழுமக் கல்வி, உடல்நலம் மற்றும் சுகாதாரக் கல்வி, நாட்டுப்புறக் கல்வி உள்ளிட்ட 6 தலைப்புகள் கீழ் ஆசிரியர்கள் பாட இணைச் செயல்பாடுகளை நடத்த வேண்டுமென உத்தரவு உள்ளது. இதில் விழுமக் கல்வியின் கீழ் நீதிக்கதை, நீதிபோதனை, நன்னெறிக் கதை ஆகியவை உள்ளன. பாடம் நடத்த வேண்டுமென அறிவிப்பு உள்ளதே தவிர, பாடத் திட்டம் எதுவும் இல்லை.

நன்னெறிக் கதைகளுக்கான துணைப் பாடமும் இல்லை. நீதிபோதனை வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை அறிவிக்காமல், ஆசிரியர்களின் விருப்பத்துக்கு கதைகளைக் கூறவும், அதன் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்தவும் சொன்னால் எப்படி சரியாக இருக்கும்? எனவே துணைப் பாடத்தை மீண்டும் இணைத்து, அதற்கான பாடத் திட்டத்தையும் வெளியிட வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x