Published : 24 Sep 2013 10:20 PM
Last Updated : 24 Sep 2013 10:20 PM

சமூகப் பிரச்னைகளை சினிமா பிரதிபலிக்க வேண்டும்: குடியரசுத் தலைவர்

சமுதாய பிரச்சினைகளை திரைப்படங்கள் பிரதிபலிக்க வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பேசினார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருதுகளை வழங்கி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசுகையில், “நாட்டில் நன்னெறிகள் குறைந்துவரும் போக்கு காணப்படுகிறது. இதனை மாற்றுவதற்கு, சினிமா உலகினர் முயலவேண்டும்.

தங்களது திரைப்படங்களில் சமுதாய மாற்றத்துக்குத் தேவையான, புதிய சிந்தனைகளைத் தூண்டும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சமுதாய பிரச்சினைகளை திரைப்படங்கள் பிரதிபலிக்க வேண்டும்.

சினிமா என்பது சக்திவாய்ந்த ஊடகம். பொழுதுபோக்கைத் தாண்டி, சமூகப் பொறுப்புணர்வுடனும் அதில் இருப்பவர்கள் செயல்பட வேண்டும்.

புணேவில் உள்ள திரைப்படக் கல்லூரி மற்றும் கொல்கத்தாவில் உள்ள சத்யஜித் ரே திரைப்படக் கல்லூரி போன்றவற்றின் செயல்பாட்டை பலப்படுத்தி தேசிய அளவிலான நிறுவனங்களாக அதனை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார் அவர்.

ஜெயலலிதாவுக்கு விருது!

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழக அரசும் இணைந்து இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை சென்னையில் கோலாகலமாக கொண்டாடின. கடந்த நான்கு நாட்களாக தென்னிந்திய திரையுலகக் கலைஞர்கள் பங்கேற்ற கலைவிழாவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழித்திரைப்படங்களில் எல்லா வகையிலும் பங்கேற்பு செய்து சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடத்தப்பட்டன.

'இந்திய சினிமா 100' என்று பெயரிடப்பட்டிருந்த இந்த நிகழ்வின் இறுதிநாள் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடந்தது. இதில் தலைமை விருந்தினராக, குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். திரையுலகில் சாதனை புரிந்ததற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விருது வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x