Published : 10 Feb 2017 07:25 PM
Last Updated : 10 Feb 2017 07:25 PM
கோவை சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் உள்ளடங்கியது விளாங்குறிச்சி கிராமம். ஓ.பன்னீர் செல்வத்தின் அணியில் முதலாவதாக இணைந்த கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஆறுகுட்டியின் சொந்த ஊர்.
இங்கு மட்டுமல்ல இந்த ஊரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும், 'தமிழகத்தின் இரும்புப் பெண்மணியின் அரசியல் வாரிசு, இளைய புரட்சித்தலைவரே!' என்கிற ரீதியில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு வாழ்த்துகள் கூறி ஆறுகுட்டியின் வாழ்த்து போஸ்டர்கள் கடை விரிக்கின்றன.
'இது நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஏற்கனவே உள்ளூர் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆறுகுட்டி இணக்கமாக இல்லை. எனவேதான் அவர் ஓபிஎஸ் தனியே சென்றதும் உடனே போய் இணைந்து கொண்டார்!' என அதிமுக மாவட்ட நிர்வாகிகள் பலரும் கருத்து கூறிக் கொண்டிருக்கும் நிலையில், அவரின் ஊர்க்காரர்களின் பேச்சோ வேறு மாதிரி இருக்கிறது.
'அவர் செய்த செயலில் எங்களுக்கு பூரண திருப்தி. மக்களின் மனநிலையையே அவர் பிரதிபலித்திருக்கிறார். இந்த விஷயத்தில் கட்சிக்குள் பலரும் ஊசலாட்ட நிலையிலேயே இருக்க, எந்த ஒரு சலனமும் இல்லாமல் நேரே சென்று ஓபிஎஸ்ஸூடன் நின்றார் என்றால் அது சாதாரணமானதல்ல. அவர் இந்த முடிவை எடுப்பார் என்று நாங்களும் நினைக்கவில்லை; அவரும் நினைக்கவில்லை; ஏன் ஓபிஎஸ் கூட இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அதுதான் ஆறுகுட்டி ஸ்டைல்!' என்று கூறி அவர் செயல்பாட்டிற்கான பின்னணி செயல்பாடுகளை விவரிக்கிறார்கள்.
வி.சி. ஆறுகுட்டி சிறுவயது முதலே எம்ஜிஆர் விசுவாசி. ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளர் ஆனபின்போ அவருக்கு தீவிர விசுவாசியாகவே திகழ்ந்தார். இவரிடம் ஜமாப் இசைக்குழு உண்டு. அதில் 200 பேருக்கு மேல் அங்கம் வகிக்கிறார்கள். ஜெயலலிதா எங்கு வந்தாலும் அந்த ஜமாப் குழுவோடு சென்று அந்த இசை முழக்கி அவரை வரவேற்பது வழக்கம். அதில் ஜெ. பல இடங்களில் புளகாங்கிதம் ஆகி நேராக அழைத்து பாராட்டியதும் உண்டு. அந்த வகையில் விளாங்குறிச்சி ஊராட்சி மன்ற உறுப்பினர், கட்சியின் கிளைச்செயலாளர் தொடங்கி சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய செயலாளர் பொறுப்புக்கும் உயர்ந்தார்.
அதே நேரத்தில் 1996 முதல் 3 முறை விளாங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராகவும் தொடர்ந்து பதவி வகித்துள்ளார். இந்த வகையில் இந்த ஒன்றியத்தில் கட்சியை முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். கட்சியில் கோவை மாவட்ட செயலாளர்கள் யார் வந்தாலும் இந்த ஒன்றியத்தில் இவரை மீறி, இவரின் விசுவாசிகளை மீறி யாருக்காவது பொறுப்பு கொடுத்தால் தட்டிக் கேட்கவும் தயங்காதவராகவே விளங்கினார்.
(ஆறுகுட்டி எம்.எல்.ஏ)
கோவைக்கு ஜெயலலிதா தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் வந்த போது அவர் தங்குவதற்கு காளப்பட்டியில் சொகுசு மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்ததில் நெருக்கம் ஆனார். கோடநாடு பங்களாவில் கிரஹப்பிரவேச நிகழ்ச்சி ஒன்று நடந்த போது இவருக்கு ஜெ.விடம் ஸ்பெஷல் அழைப்பு வந்தபோது கோவையில் உள்ள கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரது காதுகளில் புகை வந்ததை இப்போதும் நினைவுகூர்கிறார்கள் இந்த ஊரில் உள்ள இவரின் விசுவாசிகள்.
அந்த அடிப்படையில் 2011-ல் கவுண்டம்பாளையம் தொகுதியில் முதல்முறையாக எம்.எல்.ஏ ஆனார். அதையடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் இவரின் ஆதரவாளர்கள் பலருக்கு சீட் மறுக்கப்பட்டது. அதற்காக அப்போதைய மாவட்ட செயலாளருக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கினார். இதையொட்டி சுயேச்சையாக களம் இறங்கிய இவரின் ஆதரவாளர்கள் 2 பேர் அதிமுக வேட்பாளர்களையே எதிர்த்து வெற்றி பெற்றனர். இதை வைத்து இவருக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் உள்ளடி வேலைகள் செய்ய, இவரோ அந்த சுயேச்சை கவுன்சிலர்களை ஜெயலலிதாவையே சந்திக்க வைத்து கட்சிக்குள் சேர்த்துக் கொள்ள வைத்தார்.
இப்படி இவரது சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் உள்ள 22 வார்டுகள், ஊராட்சி மன்றங்களில் தன் ஆதரவாளர்களுக்கே முக்கியத்துவம் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். ஒரு சமயம் இவரின் சொந்த ஊரில் ஒரு தண்ணீர் தொட்டி திறப்பு விழாவிற்கு அப்போதைய உள்ளாட்சி அமைச்சர் முனுசாமி வருகை புரிந்தார். அதற்கு தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் இவருக்கு முறையான அழைப்பு கட்சியில் வரவில்லை.
அதேபோல் இவர் ஆதரவாளரான குறிப்பிட்ட ஊர் கிளைச்செயலாளருக்கும் மாவட்ட கட்சி நிர்வாகி தகவல் தெரிவிக்கவில்லை. அதை முன்வைத்து ஊருக்குள் வந்த அமைச்சருடன் பிரச்சினை செய்தார். அதையடுத்து உள்கட்சி பிரச்சனைகளை உணர்ந்து தான் கலந்து கொள்ள இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் திரும்பிப் போனார் அமைச்சர். ஒரு கட்டத்தில் இவருக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு வருவதாக கட்சிக்குள் பேச்சு இருந்தது. ஏற்கெனவே இவரது அதிரடி அரசியலை முன்னிருத்தி அந்த பொறுப்பு வராமல் முக்கிய நிர்வாகிகள் பார்த்துக் கொண்டதை இப்போதும் நினைவுகூர்கிறார்கள் இவரின் ஆதரவாளர்கள்.
அதேபோல் 2016 தேர்தலில் ஆறுகுட்டியை ஓரம் கட்டி சீட் கொடுக்க விடாமல் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றுபட்டு நின்றனர். அதை எதிர்த்தும் பனிப்போர் நடத்தி வென்றதாகவும் சொல்கிறார்கள். இப்படி பல்வேறு அதிரடி அரசியலுக்கு பெயர் போன ஆறுகுட்டி தற்போது ஓபிஎஸ் பக்கம் சென்றது பற்றி பல்வேறு சுவாரஸ்யத் தகவல்களை தெரிவிக்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.
( பன்னீர்செல்வததுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போஸ்டர்களுடன் விளாங்குறிச்சி கிராமம்.)
இதுகுறித்து விளாங்குறிச்சி அதிமுக கட்சிக்கிளை முன்னாள் செயலாளரும், ஆறுகுட்டி விசுவாசியுமான கோபால்சாமி பேசும்போது, 'ஆரம்பத்தில் சசிகலாவுக்கே ஆதரவு தெரிவித்து வந்தார் அவர். சசிகலாவின் உதவியாளர்கள் மூலம் அதை முழுமையாக தெரிவித்தே வந்தார். ஆனால் சசிகலாவின் உறவுக்காரர்கள் அவரை சுற்றி நிறைந்தனர். அவர்கள் எல்லாம் ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள். அவர்களை உடன் வைத்துக் கொள்வதில் எம்எல்ஏவுக்கு விருப்பமில்லை. அதைப்பற்றி ஊருக்குள் மக்களிடமும், கட்சி விசுவாசிகளிடமும் கடும் எதிர்ப்பும் இருந்தது. அந்த எதிர்ப்பை 6 மாதங்களில் சரி செய்யவேண்டும். அதற்காக கட்சி பொதுச்செயலாளர் என்ற முறையில் நல்ல திட்டங்களை தீட்டி அரசிடம் (முதல்வர் பன்னீர் செல்வத்திடம்) நிறைவேற்றக் கோர வேண்டும்.
அவையெல்லாம் நிறைவேறி மக்களிடம் நல்ல அபிமானம் வந்த பிறகே சசிகலா முதல்வர் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதையும் தெரிவித்து வந்தார். அதை அவர் சும்மா சொல்லவில்லை. ஊர் ஊராக தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஒரு வார காலம் சுற்றி மக்களிடம் பேசியே தெரிந்து கொண்டார். அந்த பிரச்சார வாகனத்தில் கூட சசிகலா புகைப்படத்தையே பொருத்தி வைத்திருந்தார். மிகவும் கடுமையான எதிர்ப்பு இருப்பதை கோவை மாவட்டத்தில் மற்ற எம்எல்ஏக்களும் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இவரைப் போல் வெளிப்படையாக பேசத் தயங்கினார்கள்.
குறிப்பாக ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது 74 நாட்களும் உடன் இருந்தவர் சசிகலா மட்டுமே. அவர் மட்டுமே ஜெயலலிதாவிற்கு என்ன நடந்தது என்று சொல்ல முடியும். அதை மக்களுக்கு புரியும்படி அவரே எடுத்துச் சொல்ல வேண்டும் என்று விரும்பினார். அதை நேரடியாக பன்னீர்செல்வம் வெளிப்படுத்தியதும் உடனே அவரை வீடு தேடிச் சென்றுவிட்டார். ஆதரவும் தெரிவித்தார். நாங்களே இதை எதிர்பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஓபிஎஸ் கூட இதை எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லவேண்டும்!' என்று தெரிவித்தார்.
ஆறுகுட்டியின் விளாங்குறிச்சி வீட்டின் முன்பு 3 போலீஸார் ஷிப்ட் முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 'ஓபிஎஸ்ஸூக்கு எதிராக குறிப்பிட்ட சாரார் சென்னையில் கோஷம் எழுப்புவது போல் இங்கேயும் செய்வார்கள் என்று எண்ணி பாதுகாப்பு கொடுக்கிறார்கள். அப்படி இவரின் செயல்பாட்டை எதிர்க்க இங்கே ஓர் ஆள் கூட இல்லை; அவர் எப்போ வருவார். வரவேற்கப் போகணும்ன்னு போன் பண்றவங்களே இருக்காங்க. எனவே பாதுகாப்பு வேண்டாம் என்றுதான் சொன்னோம். அவர்கள்தான் கேட்கவில்லை!' என்றார் ஆறுகுட்டியின் மனைவி மற்றும் குடும்பத்தினர். ஆறுகுட்டிக்கு அசோக்பாபு என்ற மகனும், அபிநயா என்ற ஒரு மகளும் உள்ளனர். இருவருமே அதிமுகவின் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT