Published : 27 May 2017 10:53 AM
Last Updated : 27 May 2017 10:53 AM
நாகை- காரைக்கால் மாவட்டங் களின் எல்லைப் பகுதியில் சந்திரப்பாடி அருகே மிகவும் சேதமடைந்த நிலையிலிருந்த சிறு பாலத்தை கட்டும் பணியை அப்பகுதி மக்களே மேற்கொண்டுள்ளனர்.
தமிழகப் பகுதியான நாகப் பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகே சந்திரப்பாடி என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்கு சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
நாகை- காரைக்கால் மாவட்டங் களின் எல்லைப் பகுதிகள் இணையும் இடமான பூவம் நண்டலாறு பாலத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஊருக்கு, சுமார் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சாலை வழியாகத்தான் செல்ல முடியும்.
சாலையின் இருபுறமும் பள்ள மான பகுதிகளுடன் மிகவும் குறுகலாக இந்தச் சாலை அமைந் துள்ளது. இச் சாலையின் குறுக்கே அமைந்துள்ள பெரிய வடிகால் வாய்க்கால் ஒன்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த சிறு பாலம் சுமார் 2 ஆண்டுகளாக மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.
நாகை மாவட்டத்திலேயே சந்திரப்பாடி மீனவ கிராமத்தி லிருந்துதான் மிகவும் அதிகமான அளவில் மத்தி மீன்கள் கேரளாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் நாள்தோறும் சுமார் 40 லோடு வேன்கள் வரை இங்கு வந்து செல்கின்றன. மேலும், அப்பகுதியில் உள்ள இறால் பண்ணைகளுக்கான வாகனங் களும் வந்து செல்கின்றன.
இதனால் இந்தப் பாலம் போக்குவரத்துக்கு உகந்ததாக தொடருமா என்ற நிலை ஏற்பட்டது. பாலம் உடைந்தால் கிராமம் துண்டிக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டது. இந்தப் பாலத்துக்கு அப்பால் தமிழகப் பகுதியில் சாலைகள் அகலமாக அமைக்கப்பட்டு உள்ளதுடன் அடுத்தடுத்து உள்ள பாலங்கள் சீரமைக்கப்பட்டும், புதிதாகக் கட்டப்பட்டும் உள்ளன.
சேதமடைந்த இந்தப் பாலத்தை புதிதாகக் கட்டித்தரக் கோரி சந்திரப்பாடி ஊராட்சி சார்பில் காரைக்கால் மாவட்ட நிர்வாகத் திடம் கோரிக்கை விடுத்து நீண்ட காலமாக மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
இந்நிலையில், பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்டும் பணியை சந்திரப்பாடி கிராம மக்களே முன் வந்து கடந்த சில நாட் களாக மேற்கொண்டுள்ளனர். ஆனால், காரைக்கால் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கவனத்துக்கு இது தெரிய வில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தெரிந்தே, அவர்களின் வாய்மொழி உத்தரவின் அடிப்படையிலேயே பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, பாலம் கட்டுவது தொடர்பாக பணம் வசூலிப்பதில் சந்திரப்பாடி பகுதியில் நேற்று முன்தினம் பிரச்சினை எழுந்து, அதுதொடர்பாக பொறையாறு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினை பேசி முடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ப.பார்த்திபன் நேற்று கூறியபோது, “சந்திரப்பாடி கிராம மக்கள் பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத் திருந்தனர். புதுச்சேரி அரசிடம் போதுமான நிதி வசதி தற்போது இல்லாத சூழலில் தாங்களாகவே முயற்சி எடுத்து பாலத்தைக் கட்டிக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், அதற்கென முறையான ஒப்புதல் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை. மக்கள் தாமாகவே கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. நேற்று முன்தினம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், பாலப் பணிகளை தடுத்து நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலோ அல்லது அப்பகுதி மக்கள் ஒரு அமைப்பு ரீதியாகவோ அணுகினால், பாலத்தை அவர்களே கட்டிக்கொள்ளும் வகையில் அனுமதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT