Last Updated : 27 Mar, 2017 09:27 AM

 

Published : 27 Mar 2017 09:27 AM
Last Updated : 27 Mar 2017 09:27 AM

குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறல்: 5 ஆண்டுகளாக நீடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு - திட்டமிட்டு இழுத்தடிப்பதாக சிபிசிஐடி மீது குற்றச்சாட்டு

ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. வழக்கை திட்டமிட்டு இழுத்தடிப்பதாக சிபிசிஐடி போலீஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோ தரர் கே.என்.ராமஜெயம். இவர், கடந்த 29.3.2012 அன்று திருச்சி- கல்லணை சாலையில் திருவளர்ச் சோலை பகுதியில் உள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து, திருச்சி மாநகர போலீஸார் நடத்திய விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால், கடந்த 2012 ஜூன் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 12 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டும், குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை.

கால அவகாசம்

இதையடுத்து, இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி ராம ஜெயம் மனைவி லதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதன்பின் இம்மனு மீது விசாரணை நடைபெறும்போது, குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி போலீஸார் தொடர்ச்சி யாக கால அவகாசம் பெற்று வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி, கடந்த ஜன.19-ம் தேதி கடைசியாக விசாரணை நடைபெற்றது. அப் போது, 11-வது விசாரணை அறிக் கையை தாக்கல் செய்த சிபிசிஐடி போலீஸார், குற்றவாளியை கைது செய்ய தங்களுக்கு மேலும் 3 மாதம் கால அவகாசம் கேட்டனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கோகுல்ராஜ், வரும் ஏப்.19-ம் தேதி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், ராமஜெயத்தின் 5-வது ஆண்டு நினைவு தினம் வரும் 29-ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இத்தனை ஆண்டுகளாகி யும் குற்றவாளிகள் கைது செய்யப் படாமல் இருப்பது ராமஜெயம் குடும்பத்தினரிடமும், திமுகவினரி டமும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, “தமிழக அரசும், காவல் துறையும் நினைத்தால் குற்றவாளி களை கைது செய்துவிட முடியும். ஆனால், அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. சிபிசிஐடி போலீஸாரை நம்பிக் காத்திருந்து ஏமாந்ததுதான் மிச்சம்” என்றனர்.

தாமதமாவது ஏன்?

இதுகுறித்து சிபிசிஐடி போலீ ஸாரிடம் கேட்டபோது, “ராமஜெயம் கொலை வழக்குத் தொடர்பாக அமைக்கப்பட்ட அத்தனை தனிப் படைகளும், தற்போதும் செயல் பட்டு வருகின்றன. இருப்பினும், இடைப்பட்ட நாட்களில் துறையூர் அருகே வெடிமருந்து தொழிற்சாலை விபத்து வழக்கு, தொழிலதிபர் துரைராஜ் உட்பட 4 பேரை கொலை செய்த போலி சாமியார் கண்ணனின் வழக்கு ஆகியவை குறித்தும் செயல்பட்டு வருவதால், ராமஜெயம் கொலை வழக்கின் விசாரணையில் லேசான சுணக்கம் ஏற்பட்டது. எனினும், தற்போது அந்த நிலை மாறிவிட்டது. கொலையாளிகள் குறித்து முழுவீச்சில் விசாரித்து வருகிறோம். விரைவில் கைது செய்துவிடுவோம்” என்றனர்.

உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்

இதுகுறித்து கே.என்.நேருவின் குடும்ப வழக்கறிஞரான பாஸ்கரன் கூறும்போது, “வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனு இதுவரை 8 நீதிபதிகளை சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறையும் சிபிசிஐடி போலீஸார் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கால அவகாசம் வாங்கி வருகின்றனர். ரகசிய அறிக்கை என்ற பெயரில் இழுத்தடிப்பு செய்கின்றனர்.

இப்படியே நீண்ட காலத்துக்கு இழுத்தடித்துவிட்டு, இறுதியில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை என கூறி வழக்கை மொத்தமாக முடித்துவிட போலீஸார் முடிவு செய்துள்ளதுபோல தெரிகிறது. இனியும், நீதிமன்றம் சிபிசிஐடிக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது. எங்கள் மனுவை ஏற்றுக்கொண்டு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், சிபிஐக்கு மாற்ற முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். அவ்வாறு தள்ளுபடி செய்யும்பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுக எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x