Published : 11 Dec 2013 11:59 AM
Last Updated : 11 Dec 2013 11:59 AM

சிலிண்டர் விலை உயர்வுக்கு ராமதாஸ் கண்டனம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் விலை உயர்வை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றும் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.3.46 உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வு கடுமையாக கண்டிக்கத் தக்கது.

எரிபொருள் விலை நிர்ணயத்தில் மத்திய அரசு தவறானக் கொள்கையை கடைபிடித்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை மக்களின் அடிப்படைத் தேவையாக கருதி விலை நிர்ணயம் செய்ய வேண்டிய அரசு, அவற்றை பணம் காய்க்கும் மரமாக கருதி வரி மேல் வரி விதித்து வருகிறது.

கடந்த 2012 - 13 ஆண்டில் எரிபொருட்களின் மீதான வரி மூலமாக மட்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கும் வருவாய் கிடைத்திருக்கிறது என்பதிலிருந்தே எரிபொருள் விலை என்ற பெயரில் ஏழை மக்களை மத்திய, மாநில அரசுகள் கசக்கிப் பிழிகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

சமையல் எரிவாயு உருளைகளை வினியோகிக்கும் முகவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை உயர்த்தி வழங்கப்பட்டது தான் விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எரிவாயு முகவர்களுக்கு ஓர் உருளைக்கு ரூ. 37.25 கமிஷனாக வழங்கப்பட்டு வருகிறது. முகவர்களின் கமிஷன் தொகை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் உருளைக்கு ரூ.11.50 உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் முகவர்களின் கமிஷனை மீண்டும் ரூ.3.46 உயர்த்துவதும், அதை பொது மக்களின் தலையில் சுமத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். முகவர்களின் கமிஷனை உயர்த்துவதாக இருந்தால் அதை மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து அந்த சுமையையும் மக்களின் தலையில் சுமத்துவது முறையல்ல. முகவர்களின் நலனில் காட்டும் அக்கறையில் சிறிதளவையாவது மக்களிடமும் மத்திய அரசு காட்ட வேண்டும்.

ஏற்கனவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஒன்பதாக மத்திய அரசு குறைத்து விட்டது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு குறைந்தது 2,000 ரூபாயாவது கூடுதலாக செலவாகிறது. இன்னொருபுறம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் இன்னும் ஒரு விலை உயர்வை மக்கள் தாங்க மாட்டார்கள். எனவே, முகவர்களுக்கான கமிஷன் தொகை உயர்வை மத்திய அரசே ஏற்றுக் கொண்டு, சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

முகவர்களுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு, வழங்கப்படும் கமிஷன் தொகை ரூ.3.46 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வின் அடிப்படையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.3.46 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x