Published : 13 Oct 2013 03:38 PM
Last Updated : 13 Oct 2013 03:38 PM
வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால், சென்னையில் 60 அடி ஆழத்தில் மெட்ரோ சுரங்க ரயில் நிலையம் அமைக்கப்படும் 19 இடங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் ரூ.14,600 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழித்தடங்களில் பணிகள் நடக்கின்றன. முதலாவது வழித்தடம், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை (23 கிலோ மீட்டர்) செல்கிறது. இரண்டாவது வழித்தடம், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை (22 கிலோ மீட்டர்) செல்கிறது.
சனிக்கிழமை வரை கோயம்பேடு - ஈக்காட்டுத்தாங்கல் இடையே 15.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு (15,400 மீட்டர்) பறக்கும் பாதையில் தண்டவாளம் பதிக்கப்பட்டுவிட்டது. நகரின் பல பகுதிகளில் 8.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு (8,600 மீட்டர்) சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டு உள்ளது. சுரங்கப் பாதை பணி 24 சதவீதம் முடிந்துவிட்டது.
இம்மாதம் 20-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பறக்கும் ரயில் பாதை மற்றும் பறக்கும் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் பகுதியில், வீடுகளின் மொட்டை மாடியில் இருந்து குழாய் வழியாக தரைப்பகுதிக்கு மழைநீர் வடியச் செய்வதைப் போல, பெரிய குழாய்கள் வழியாக மழைநீரை வடியச் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
ஒவ்வொரு மெட்ரோ சுரங்க ரயில் நிலையமும், தரைமட்டத்தில் இருந்து 60 அடி ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி, 200 மீட்டர் நீளத்திலும், 20 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவமழை இம்மாதம் 20-ந் தேதி தொடங்கி டிசம்பர் 20 வரை நீடிக்கும். சில ஆண்டுகள் ஜனவரி மாதம் தைப்பொங்கல் வரைகூட நீடித்திருக்கிறது.
எனவே, பருவமழைக் காலத்தில் தொடர்ந்து மழைபெய்யும்போது மழைநீர் தேங்குவதை போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற வேண்டிய கட்டாயம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருவழித்தடங்களில் மொத்தம் 19 இடங்களில் சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி திறந்த வெளியில் நடைபெற்று வருகின்றன.
முதல் வழித்தடத்தில், வண்ணாரப்பேட்டை, உயர்நீதிமன்றம், சென்ட்ரல், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி., சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் சுற்றுச்சுவர் அமைத்து கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. மண்ணடி, ஆயிரம்விளக்கு, டி.எம்.எஸ். தேனாம்பேட்டை, நந்தனம் ஆகிய இடங்களில் சுரங்க ரயில் நிலையத்திற்காக சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
இரண்டாவது வழித்தடத்தில், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர் ஆகிய இடங்களில் சுரங்க ரயில் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த 19 இடங்களில் அதிகளவு மழைநீர் தேங்கும் அபாயம் இருப்பதால், ஒவ்வொரு இடத்திலும் இரண்டு மோட்டார் பம்புகளும், திடீரென மோட்டார் பம்ப் பழுதாகிவிட்டால் மாற்று ஏற்பாடாக மற்றொரு மோட்டார் பம்ப் என்று மொத்தம் 3 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 50-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் சரியான இயங்கும் நிலையில் இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கப்படுகிறது.
மழைநேரத்தில், மழைநீர் தேங்குவதைக் கண்காணித்து உடனுக்குடன் மோட்டார் பம்புகளை இயக்குவதற்கு தனியாக ஆட்களை நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் இடங்களில் பலத்த மழைபெய்யும்போது நாலாபக்கமும் மழைநீர் தேங்குவதைத் தடுக்க சாய்வான அமைப்பு மூலம் ஓர் முனையில் தேங்கச் செய்து அங்கிருந்து மோட்டார் மூலம் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றி மழைநீர் வடிகாலில் வடியச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.
சுரங்க ரயில் நிலையம் கட்டுமானப் பணிக்காக 60 அடி ஆழம் வரை தோண்டப்படும் மண், சென்னை நகரில் இருந்து லாரிகள் மூலம் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநீர்மலைக்கு எடுத்துச் சென்று கொட்டப்படுகிறது. மழைநேரத்தில் இந்தப் பணியும் பாதிக்காமல் இருக்க லாரிகளை தார்பாய் கொண்டு மூடிடவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுபோல சென்னை கோயம்பேட்டில் 115 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன கட்டுப்பாட்டு அறையும், மெட்ரோ ரெயில் பணிமனையும் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியும் மழையால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT