Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM
கிண்டி மின்பகிர்மான கோட்டத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர்ப்புக் கூட்டத்தில் ஒருவர் மட்டுமே பங்கேற்றார்.
சென்னையில் 6 மின்பகிர்மான கோட்டங்களும், அவற்றின் கீழ் 15 துணை மின்பகிர்மான கோட்டங்களும் உள்ளன. மின் நுகர்வோர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், அந்தந்தக் கோட்டங்களில் மாதாந்திர குறை தீர்ப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தக் கூட்டங்களில், மின் சேவை நீக்குதல், பழுதான மீட்டரை மாற்றுதல், மின் பற்றாக்குறை உள்ளிட்ட புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
கிண்டி மின்பகிர்மான கோட்டத்துக்கான மின் நுகர்வோர் குறைதீர்ப்புக் கூட்டம், கே.கே.நகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 10 முதல் 1 மணி வரை நடந்தது. இதில் மணப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெரமையா என்பவர் மட்டுமே பங்கேற்றார். அவர், 5 வருடமாக பெற்று வந்த மின் சேவையை தற்போது விலக்கிக் கொள்ள விரும்புவதாகவும், தான் கட்டிய டெபாசிட் பணத்தை திருப்பித் தர வேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தார்.
ஒருவர் மட்டுமே பங்கேற்றது குறித்து சென்னை மின் பகிர்மான வட்ட கண்காணிப்பு பொறியாளர் பி.செல்வரத்தினம் கூறுகையில், ‘‘கே.கே.நகரிலுள்ள கிண்டி மின்பகிர்மான கோட்ட அலுவலகத்தின் மேல் தளத்தில்தான் சென்னை மின்பகிர்மான வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகமும் உள்ளது. பொதுமக்கள் தினமும் இங்கு வந்து தங்களது குறைகளைத் தெரிவித்து வருகிறார்கள். அதற்குரிய தீர்வுகளை உடனுக்குடன் அளித்து வருகிறோம். இருந்தாலும் குறைதீர்ப்பு கூட்டம் பற்றிய விளம்பரங்களை அனைத்து ஊடகங்களிலும் வெளியிட்டு வருகிறோம்’’ என்றார்.
அசோக் நகரைச் சேர்ந்த லலிதா என்பவர் கூறுகையில், “கிண்டியில் நடக்கும் மின் நுகர்வோர் கூட்டம், ஒவ்வொரு மாதமும் திங்கள்கிழமையில்தான் நடக்கிறது. வாரத்தில் முதல் வேலை நாளான திங்கள்கிழமை அலுவலகத்துக்கு விடுப்பு போட முடியாது. எனவே, இந்தக் கூட்டத்தை வார இறுதி நாட்களில் நடத்த வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT