Published : 15 Jun 2016 12:32 PM
Last Updated : 15 Jun 2016 12:32 PM

லஞ்சம் தராததால் இளைஞர் உயிரிழந்த சம்பவம்: அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகத்துக்கு சிக்கல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ. 300 லஞ்சம் கொடுக்காததால், தட்டச்சு தொழிலாளியின் மகன் இறந்த சம்பவம் குறித்து மாநில சுகாதாரத்துறை செயலாளர் விசாரணை மேற்கொண்டுள்ளதால் மருத்துவமனை நிர்வாகத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மதுரை புதூரைச் சேர்ந்த தட்டச்சு தொழிலாளி கணபதி. இவர் வலிப்பு நோயால் உயிருக்குப் போராடிய தனது மகன் ராஜேந்திர பிரசாத்தை (18), 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றார். அங்கிருந்த மருத்துவப் பணியாளருக்கு ரூ. 300 லஞ்சம் கொடுக்க மறுத்ததால், அவர் ஸ்ட்ரெச்சரை தள்ள மறுத்தது, ராஜேந்திரபிரசாத் உயிருக்குப் போராடிய நிலையிலும் மருத்துவ அனுமதிச் சீட்டு இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் உள்ளிட்ட காரணங்களால் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தாமதிக்காமல் முதலுதவி சிகிச்சையை மேற்கொண்டிருந்தால், அவர் உயிர் பிழைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மகனைப் பறிகொடுத்த கணபதி மருத்துவமனை டீன் எம்ஆர். வைரமுத்துராஜு, மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். விசாரணையில் வெளியாள் ஒருவர் லஞ்சம் கேட்டதாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், ஆரம்பத்தில் இந்த விவகாரத்தில் யார் மீதும் நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால், கடும் அதிருப்தி அடைந்த கணபதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார். அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் அவசர அவசரமாக நேற்று முன்தினம் செவிலிய உதவியாளர் பூப்பாண்டி, தற்காலிக பணியாளர் சித்ரா ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்தது. ஆனால், பணியில் இருந்த மருத்துவர், மற்ற பணியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேற்று முன்தினம் மருத்துவமனை டீன் எம்.ஆர். வைரமுத்துராஜு திடீரென சென்னைக்கு அழைக்கப்பட்டார். மருத்துவமனையில் லஞ்சம் தலைவிரித்தாடும் விவகாரத்தில் ராஜேந்திர பிரசாத் இறந்தது தொடர்பான விசாரணைக்குத்தான் டீன் சென்றுள்ளதாகக் கூறப் படுகிறது.

ஆரம்பத்திலேயே, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த விவகாரம் மாநில சுகாதாரத்துறை வரை சென்றிருக்காது. தற்போது சுகாதாரத்துறை செயலாளரே இந்த விவகாரத்தில் முழு விசாரணை மேற்கொண்டுள்ளதால் மருத்து வமனை டீனுக்கு நெருக்கடி ஏற்ப ட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரத்தில் விசாரித்தபோது மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டையுடன்தான் பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமல் பணியாற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளை பார்க்க வருவோர், அதற்கான அனுமதிச் சீட்டு இல்லாமல் நேற்று அனும திக்கப்படவில்லை. சிசிடிவி கேமராக்களை முழுமையாகக் கண்காணிக்க தனிக் குழுவை நியமிக்கவும், ஏதாவது ஒரு வார்டில், மருத்துவமனை வளாகத்தில் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்தால் அங்கு மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாகச் சென்று விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x