Published : 26 Sep 2014 08:18 AM
Last Updated : 26 Sep 2014 08:18 AM
தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நிய மனம் தொடர்பான நடவடிக்கைகளை எதிர்த்து அண்மைக் காலத்தில் ஏராளமான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
2009-ம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) வழிகாட்டுதல் படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட் டுள்ளது. இந்த தகுதித் தேர்வை எதிர்த்தும், தேர்வில் வெற்றி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் களில் இட ஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு தளர்வு வழங்க கோரியும் பல மனுக்கள் நீதிமன்றங்களில் தாக்கலாகின. இந்நிலையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்குவதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பால் இந்தப் பிரச்சினைக்கு சுமுக தீர்வு ஏற்பட்டது.
இதற்கிடையே வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, ஆசிரியர் பணி நியமனத் துக்கு இடைக்காலத் தடை விதித்தது. எனினும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனினும் பணி நியமன நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடும் போக்கு தொடரும் என்றே தெரிகிறது. ஆசிரியர் பணி நியமனத்துக்கான விதிமுறைகளை வகுக்கும்போது சில அதிகாரிகளின் தவறான புரிதலால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே அரசுக்கு எதிராக ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் குவிய காரணமாக அமைந்துள்ளன என்கின்றனர் கல்வியாளர்கள்.
இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:
நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைக் கல்வித் தகுதியைவிட கூடுதல் தகுதியை யாரேனும் பெற்றிருந்தால், அந்த கூடுதல் தகுதிக்கு தரப்படும் கூடுதல் மதிப்புதான் வெயிட்டேஜ். பட்டதாரி ஆசிரியர் ஒருவருக்கு பட்டப்படிப்பும், பி.எட். தகுதியும் அடிப்படை தகுதி என்றால் அதற்கு மேல் அவர் பெற்றிருக்கும் கல்வித் தகுதிக்குத்தான் வெயிட்டேஜ் தரப்பட வேண்டும். இதுதான் பொதுவாக பணி நியமனங்களில் பின்பற்றப்படும் நடைமுறை. இதன்படி கல்லூரி ஆசிரியர் நியமனத்தை மேற்கொள்ளும் ஆசிரியர் கல்வி வாரியம், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மட்டும் அடிப்படை கல்வித் தகுதிக்கும், அதற்கும் குறைவான பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண்களுக்கும் வெயிட்டேஜ் தருவது நடைமுறைக்கு முரணானது.
இந்த விதிமுறைகள் யாவும் கல்வித் துறையைச் சேர்ந்த நால்வர் குழுவின் உருவாக்கமே தவிர, அமைச்சரவை மேற்கொண்ட கொள்கை முடிவல்ல.
தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான காலி ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. அதேபோல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களும் ஏராளமானவை நிரப்பப்படவில்லை. தற்போதைய வெயிட்டேஜ் முறை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் முதல் தலைமுறையினர் ஆசிரியர் பணியில் அமர்வதை தடுப்பதாக உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கலாம் என்று உத்தரவிட்டதன் மூலம், ஒரு பெரும் பிரச்சினைக்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்தார். அதேபோல் இப்போதைய வெயிட்டேஜ் மதிப்பெண் விவகாரத்திலும் முதலமைச்சர் தலையிட்டு உரிய உத்தரவைப் பிறப்பித்தால், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தகுதியுள்ள பலர் ஆசிரியர்களாக பணி நியமனம் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
கல்வியியல் பட்டயம் அல்லது பட்டம் பெற்றுள்ளவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, வயது மற்றும் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு வெயிட்டேஜ் தருவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய திருப்பம்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளிப்பதற்காக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லாது என உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஆசிரியர் நியமன விவகாரத்தில் இன்னொரு புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றி பரவலான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT