Published : 21 Jun 2017 11:50 AM
Last Updated : 21 Jun 2017 11:50 AM

மாட்டிறைச்சி விற்பனையில் ‘மில்மா’? - கோழிக்கோடு பொதுக்குழுவில் வலியுறுத்தல்

வற்றிய கறவை மாடுகளை வாங்குவது மட்டுமல்ல, மாட்டிறைச்சி விற்பனையிலும் கேரள அரசு நிறுவனமான ‘மில்மா’ ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை கேரள பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ‘ஆவின்’ போல் கேரளத்தில் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து சந்தைப்படுத்தி வருவது ‘மில்மா’. மலப்புரம் திருவனந்தபுரம், எர்ணாகுளம் என மூன்று ஒன்றியங்களாகச் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், மலபார் மில்க் யூனியன் என மூன்று மண்டலங்களாக இயங்கி வருகின்றன. இந்த நிறுவனம் தமிழ்நாட்டை விட லிட்டருக்கு ரூ.5 வரை அதிக விலை கொடுத்து விவசாயிகளிடம் பாலை வாங்கி, குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது.

கால்நடைகளுக்குத் தேவை யான பருத்திக் கொட்டை, தவிடு, மக்காச்சோளம், நெல்லந்தவிடு உள்ளிட்ட பல பொருட்கள் கலந்த சத்துமிக்க புண்ணாக்கை உற்பத்தி செய்து உறுப்பினர்களுக்கு 50 கிலோ மூட்டைக்கு ரூ.200 என்ற விலையில் தருகிறது. உறுப்பினர்கள் குழந்தைகளுக்கு 10-வது முதல் 12-வது வரை கல்வி உதவித்தொகை, பால் ஊற்றுபவர்களுக்கு விபத்துக் காப்பீடு செய்வதன் மூலம், இறந்தால் ரூ.5 லட்சம், உறுப்புகள் இழந்தால் ரூ. 2 லட்சம் என பெற்றுத் தருகிறது. ஆண்டுதோறும் 1 லிட்டர் பாலுக்கு விவசாயிக்கு ரூ. 2 வீதம் லாபத்தில் பங்கும் கொடுக்கிறது.

பாலக்காட்டை தலைமையக மாகக் கொண்டு இயங்கும் மலபார் மில்க் யூனியனில் 1137 மில்மா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில், 30 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இது, கடந்த ஆண்டு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்து ரூ. 10.47 கோடி லாபம் ஈட்டியுள்ள தாக அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக மாவட்டந்தோறும் சங்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடந்தன. அதில், பாலுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டும், நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன போன்ற வழக்கமான கோரிக்கைகளைவிட மத்திய அரசு இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்று தடை போட்டிருப்பதால் அந்த மாடுகளை மில்மாவே வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளே வலுவாக ஒலித்தன. இது ஒன்றிய பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்ற செய்தி கடந்த 16-ம் தேதி ‘தி இந்து’-வில் வெளியானது.

இதைத் தொடர்ந்து கோழிக்கோடு டவுனில் உள்ள ஒரு ஹோட்டலில் மலபார் ஒன்றிய பால் உற்பத்தியாளர் பொதுக்குழு கூட்டம் கடந்த சனிக்கிழமை நடந்தது.

இதில், மூன்று மில்மா யூனியன்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.டி. கோபால குரூப், மலபார் மில்மா சேர்மன் சுரேந்திரன் நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மாட்டிறைச்சி விவகாரமே முக்கிய இடம் பெற்றது.

இதில் பங்கேற்ற அட்டப்பாடி பாலூர் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் ‘தி இந்து’-விடம் கூறியதாவது:

பாலக்காட்டில் நடந்த ஜில்லா கூட்டத்தில், கறவை வற்றிய மாடுகளை மில்மா வாங்க வேண்டும், அதை பராமரிக்க முடியாது என தெரிவித்திருந்தோம். அந்த அடிப்படையில் பொதுக்குழுவில் இதை வலியுறுத்தியதோடு, மாட்டிறைச்சி வியாபாரத்தையும் மில்மா நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கும், எளிய விலையில் மக்களை சென்றடைவதற்கும் மலப்புரம் ஜில்லாவில் பரிசோதனை முயற்சியாக சில மாதங்களுக்கு முன்பு மில்மா காய்கறி கொள்முதல் மற்றும் விற்பனையில் இறங்கியுள்ளது. அதை மற்ற ஜில்லாக்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது.

இதையெல்லாம் செய்யும் மில்மா, அடிமாடுகளை கொள்முதல் செய்து மாட்டிறைச்சி விற்பனையையும் நடத்த முடியும் என்ற எங்கள் வாதத்தை ஏற்றுக் கொண்டனர். மற்ற 2 யூனியன்களிலும் இதே கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருவதாகவும், இதை அரசிடம் தெரியப்படுத்துவதாகவும் உறுதி அளித்துள்ளனர்’ என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x