Published : 18 Mar 2017 10:29 AM
Last Updated : 18 Mar 2017 10:29 AM
நீர் நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு வலுப்பெற்றிருக்கிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு ஏரி, குளங் களை இளைஞர்கள் தூர் வாருகிறார்கள். சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் பசுமைப் போராளிகள் அமைப்பினர் பணிபுரிகிறார்கள். சேலம் பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரியைத் தூர் வாருகிறார்கள். சின்னசேலம் ஏரியில் வேலை நடக்கிறது. பெரம்பலூர் புதுக்குறிச்சி ஏரி மீட்கப்பட்டிருக்கிறது. கோவை, பேரூர் ஏரி தூர் வாரி முடிக்கப்பட்டிருக்கிறது. வரும் ஞாயிறன்று செல்வசிந்தாமணி குளத்தில் வேலை பார்க்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள். குறிச்சி ஏரியில் தூர் வார பொக்லைன் இயந்திரம் வேண்டும் என்று உதவி கேட்கிறார்கள்.
பல ஊர்களில் இளைஞர்கள், பள்ளிக் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் தங்கள் வேலைகளைத் துறந்து பணிபுரிகிறார் கள். இளைஞர்கள் பொழுதுபோக்குகளை மறந்து பணிபுரிகிறார்கள். அவர்கள் அரசை எதிர்பார்க்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சவில்லை. அவர்கள் அரசுப் பணத்தில் வேலை பார்க்கவில்லை; அரசுப் பணத்துக்காகவும் வேலை பார்க்கவில்லை. திரைப்படம் செல்ல வும் தீனி வாங்கித் தின்னவும் வைத்திருந்தப் பணத்தை செலவழித்து வேலை பார்க்கிறார் கள். ஏரித் தண்ணீர் எட்டிப் பார்க்க குட்டிப் பாப்பாக்களின் உண்டியல்களும்கூட உடைக் கப்படுகின்றன. அவர்கள் ‘நாடு எங்களுக்கு என்ன செய்தது?’ என்று கேட்கவில்லை. ‘நாட்டுக்காக நாம் என்ன செய்தோம்?’ என்பதற்காக வேலை பார்க்கிறார்கள்.
ஆனால், நாடு என்ன செய்தது தெரியுமா?
கடந்த 23.8.2012-ம் ஆண்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் ஓர் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் 143 பேரூராட்சிகளில் 234 ஊருணிகள் ரூ.54.32 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். இவை தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் ஊரகக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் செயல்படுத்தப்படும். ஊருணியில் தூர் வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல், ஊருணிக்குள் சிறு குட்டைகளை அமைத்தல், நீர்வரத்து வாய்க்கால்கள், உபரி நீர் வெளியேற்றும் வாய்க்கால்களை சீரமைத்தல், நடைபாதை, மின் விளக்கு, வேலி அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்னது அந்த உத்தரவு.
அதன்படி ஊருணிகள் தேர்வு செய்யப் பட்டு பணிகள் நடந்தன. எப்படித் தெரியுமா? பேருக்குத் தூர் வாரினார்கள். நீர்வரத்துக் கால்வாய்களையும் உபரி நீர் வெளியேற்றும் கால்வாய்களையும் மறந்தேபோனார்கள். குளங்களின் கரைகளைப் பலப்படுத்து கிறோம் என்று சொல்லி, கரைகளின் உட்சரிவு பகுதி முழுவதும் கான்கிரீட் பூசினார்கள். கரையோரப் புதர்கள் புதைந்துப்போயின. புதர்களில் வசித்த பறவைகள் பறந்துப் போயின. வளைகளிலும் பொந்துகளிலும் வசித்த பாம்புகள், நண்டுகள், தேரைகள், தவளைகள், எலிகள், ஓணான்கள், மண் புழுக்கள், கோடிக்கணக்கான பறக்கும் பூச்சிகள் என ஏராளமான சிற்றுயிரிகளும் நுண்ணுயிரிகளும் அழிந்துபோயின. கரையோரம் செழித்திருந்திருந்த நாணல்கள், வெள்ளை கரிசாலை, மஞ்சள் கரிசாலை, வல்லாரைப் போன்ற உயிர்வேலிகளும் அழிந்துபோயின.
கரையோர உயிரினங்களின் கழிவுகளை யும் பறவைகளின் எச்சங்களையும் சாப்பிட்டு வளர்ந்த மீன்கள் உணவில்லாமல் செத்து மிதந்தன. அந்தக் குளம் படிப்படியாக இறக்கத் தொடங்கியது. பாசிகளை உண்ண மீன்கள் இல்லாததால் பாசிகள் பல்கிப் பெருகின. மனிதன் உபயோகிக்க லாயக்கற்று பச்சை நிறமானது தண்ணீர். கொசுக்கள் பெருகின. அவை நம் வீடுகளைச் சூழ்ந்தன. இப்படி ஒவ்வொரு குளத்தையும் அழிக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவழித்தார்கள். இவ்வாறு இவர்கள் உருவாக்கியதன் பெயர் குளம் அல்ல; கழிவு நீர் தொட்டி.
ஒரு குளம் என்பது ஜடப் பொருள் அல்ல; அது ஓர் உயிர்ச் சூழல்! அந்த உயிர்ச் சூழலைத் தீர்மானிப்பது குளத்தைச் சார்ந்து வாழும் உயிரினங்களே. மீன்களும் நீர்வாழ் உயிரினங்களும் குளத்தின் தண்ணீரை சுத்திகரித்தன எனில் கரையைப் பின்னிப் படர்ந்த கொடி வகைத் தாவரங்களும் மரங்களின் வேர்களும் கரைகளை உயிர்வேலி களாகப் பலப்படுத்தின. உண்மையில் ஒரு குளத்தை அதன் உயிர்ச் சூழல் அழியாமல் தூர் வாரி பாதுகாக்க, மேற்கண்ட தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருந்தாலே அதுவே அதிகம்.
ஒரு குளத்தை சீரமைக்க அதன் உண்மையான கொள்ளளவை கண்டறிய வேண்டும். அதற்கு கடந்த காலங்களில் வெள்ள நேரத்தில் குளத்தில் தேங்கிய அதிகபட்ச தண்ணீர் அளவை அறிய வேண்டும். அதற்கேற்ப குளத்தின் உட்பகுதிகளில் தேங்கியிருக்கும் வண்டலை உள்ளூர் விவசாயிகள் மூலம் அள்ள வேண்டும். இவ்வாறு ஆழப்படுத்தினாலே கரையின் உயரம் தானாக உயர்ந்துவிடும். நமது இளைஞர்கள் பல இடங்களில் அப்படித்தான் தூர் வாரியிருக்கிறார்கள். சேலம் பனைமரத்துப்பட்டி ஏரி, பெரம்பலூர் புதுக்குறிச்சி ஏரி எல்லாம் சொற்ப தொகையில் வெற்றிகரமாக தூர் வாரப்பட்டவைதான்.
பச்சை பாசி படர்ந்து மனிதர்கள் பயன்படுத்த லாயக்கற்ற நிலையில் மற்றொரு குளம்
மேற்கண்ட திட்டத்தைப் போல நீர்நிலை களைப் பராமரிக்க கோடிகளில் உருவாக் கப்படும் திட்டங்கள் அனைத்தும், ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளும் அவர்களின் இரவல் மனிதர்களான ஒப்பந்ததாரர்களும் மக்கள் பணத்தை தின்றுக் கொழுப்பதற்கு என்றே தீட்டப்பட்ட ஊழல் திட்டங்களாகும். இதற்காகவே கோடிக்கணக்கில் கடன் வாங்குகிறார்கள். நாட்டின் மீது மேன்மேலும் கடன் சுமையை ஏற்றுகிறார்கள். இதோ இவை எல்லாம் அறியாமல் கைக்காசு செல வழித்து குளத்தைத் தூர் வாரிக் கொண்டிருக் கும் உங்களையும் கடனாளி ஆக்குகிறார்கள்.
நிற்க, இப்போது பல்வேறு ஊர்களின் நீர்நிலைகளைத் தூர் வாரிக்கொண்டிருக்கும் மக்களாகிய உங்களிடம் வருகிறேன். நீங்கள் செய்துகொண்டிருப்பது உன்னதமான வேலை. உங்கள் அர்ப்பணிப்புக்கு நன்றி! ஆனால், இப்போதைக்கு நீங்கள் செய்ய வேண்டிய வேலை இது அல்ல. உங்களுக்கு இதே நீர்நிலைகள் தொடர்பில் வேறொரு அவசர வேலை காத்திருக்கிறது.
தற்போது ‘குடிமராத்து திட்டம்’ என்கிற பெயரில் மற்றுமொரு பெரும் திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது தமிழக அரசு. அதனை மக்கள் பங்களிப்புடன் மக்கள் இயக்கமாக நடத்தப்போவதாகவும் பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. இப்போதே ஊழல்வாதி களும் ஒப்பந்ததாரர்களும் அதை குறி வைத்து காய்களை நகர்த்தத் தொடங்கி விட்டார்கள். இங்கே கிராம சபை கூட்டங்கள் மூலம் இளைஞர்களாகிய நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT