Last Updated : 08 Jul, 2016 12:11 PM

 

Published : 08 Jul 2016 12:11 PM
Last Updated : 08 Jul 2016 12:11 PM

தமிழகத்தில் முதல் முறை: தனியார் இடத்தில் மனிதக் கழிவு அகற்றும்போது இறந்தவரின் தாயாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

தமிழகத்தில் முதல் முறையாக தனியார் இடத்தில் மனிதக் கழிவு அகற்றும்போது உயிரிழந்தவரின் தாயாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் சூரங்கோட்டை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பழநி மனைவி வளையக்கா(69). இவரது மகன் ஆறுமுகம் 2004-ல் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் செப்டிங் டாங்க் சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி இறந்தார். இந்தியாவில் 1993-ம் ஆண்டு முதல் மனிதக் கழிவுகளை அகற்றும்போது உயிரிழந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என 2014-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் வளையக்கா மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க 19.6.2015-ல் உத்தரவிட்டது. அதன் பிறகு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

மீதம் ரூ.7 லட்சம் தராமல் இழுத்தடித்ததால் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத் துறை முதன்மை செயலர் பனீந்தர்ரெட்டி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி உயர் நீதிமன்ற கிளையில் வளையக்கா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது பனீந்தர்ரெட்டி நேரில் ஆஜராகி, தனியாருக்கு சொந்தமான இடத்தில் செப்டிங் டாங்க் சுத்தம் செய்யும்போது இறந்தவர்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டுமா? என விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாகவும், அதில் உத்தரவு வந்த பிறகு ரூ.7 லட்சம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந் நிலையில், தமிழக அரசு விளக்கம் கேட்டு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் மே 10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தனியாருக்கு சொந்தமான இடத்தில் செப்டிக் டாங்க் சுத்தம் செய்யும்போது உயிரிழப்போரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந் நிலையில் வளையக்காவின் நீதிமன்ற அவமதிப்பு மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கருணாநிதி வாதிட்டார். அப்போது அரசு சார்பில் மனுதாரருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகை பாக்கி ரூ.7 லட்சம் வழங்குவதற்கு தமிழக அரசு ஜுன் 30-ல் அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வளையக்காவுக்கு ஒரு வாரத்தில் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு மனுவை முடித்து உத்தரவிட்டார்.

இதுவரை அரசுக்கு சொந்தமான இடங்களில் செப்டிக் டாங்க் சுத்தம் செய்யும்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மட்டுமே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்கப்பட்டது. தனியார் இடத்தில் செப்டிங் டாங்க் சுத்தம் செய்யும்போது உயிரிழந்த குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. தற்போது முதல் முறையாக வளையக்காவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x