Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM

நெசவாளர்களின் வாழ்க்கையை இருளாக்கியவர் ஜெயலலிதா: காஞ்சிபுரம் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக நெசவாளர்களின் வாழ்க்கையை இருளாக்கியவர் ஜெயலலிதா என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 10 இடங்களில் திமுக பொருளாளர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரச்சாரத்தில் ஈடுபட்டு, கட்சியின் வேட்பாளர் ஜி.செல்வத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்த ஸ்டாலின் பேசியதாவது:

திமுக ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. அதேபோல் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரத்தை வழங்கி, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பாவு நூலையும் வழங்கி, இலவச வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யவைத்தோம். அதன்மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கினோம். இவ்வாறு அவர்களது வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியது திமுக.

ஆனால் ஜெயலலிதா, தமிழக அரசு சார்பில் ஏழை எளியோருக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்யும் பணியை, தமிழகத்தில் உள்ள நெசவாளர்களுக்கு வழங்காமல், ஆந்திர மாநிலத்தில் உள்ள விசைத்தறி வைத்திருக்கும் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்தார். இதன் மூலம் நெசவாளர்களின் வாழ்க்கையை இருளாக்கியவர் ஜெயலலிதா.

காஞ்சிபுரத்தில் ரூ.83 கோடி மதிப்பீட்டில், பட்டு பூங்கா அமைக்கும் திட்டத்தை திமுக அறிவித்தது. நெசவாளர்களின் நலனில் அக்கறை இல்லாத ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து, அத்திட்டத்தை பட்டுப்போக செய்துவிட்டார். இவைகள் தான் ஜெயலலிதாவின் சாதனைகள். அதனால் இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு, தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அதற்கு திமுக வேட்பாளர் ஜி.செல்வத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் நகரச் செயலர் சி.வி.எம்.சேகர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x