Published : 16 Dec 2013 09:21 PM
Last Updated : 16 Dec 2013 09:21 PM
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சாகுபடி செய்த செங்கரும்பு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால், பருவ மழை பொய்த்ததால் செங்கரும்பு எதிர்பார்த்த வளர்ச்சி அடையவில்லை. 40 சதவீதம் மகசூல் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் திண்டுக்கல், விழுப்புரம், சேலம், தர்மபுரி, தூத்துக்குடி, நெல்லை, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு தமிழகத்தில் 10,000 ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சாணார்பட்டி, நிலக்கோட்டை, வத்தலகுண்டு, கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். தைப் பொங்கல் பண்டிகைக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், விவசாயிகள் சாகுபடி செய்த செங்கரும்பு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் செங்கரும்புகள் எதிர்பார்த்த வளர்ச்சி அடையவில்லை. பொதுவாக செங்கரும்பு 7 முதல் 9 அடி வரை வளரும். ஆனால், இந்த ஆண்டு வறட்சியால் செங்கரும்பு 4 முதல் 5 அடி மட்டுமே வளர்ந்துள்ளது.
சாதாரணமாக ஏக்கருக்கு 20 முதல் 25 டன் வரை உற்பத்தி கிடைக்கும். தற்போது வளர்ச்சியில்லாததால் ஏக்கருக்கு வெறும் 10 டன் செங்கரும்பு மட்டுமே மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ராமகவுண்டர் கூறியதாவது:
செங்கரும்பைப் பொருத்தவரை பொங்கல் விற்பனைக்காக மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். மற்ற காலங்களில் பொதுமக்கள் அவற்றை விரும்பிச் சாப்பிடமாட்டார்கள். விவசாயிகளிடம் ஒரு செங்கரும்புக்கு ரூ.10, ரூ.20-க்கு வாங்கிச் செல்லும் வியாபாரிகள், விழாக் காலத்தை பயன்படுத்தி ரூ.50 முதல் 80 வரை விற்பனை செய்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பதில்லை.
செங்கரும்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.75,000 வரை செலவாகிறது. ஆனால், ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பது அரிதாக உள்ளது. அதனால், செங்கரும்பு சாகுபடி தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. பொங்கல் விற்பனைக்காக செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கரும்புகள் போதிய வளர்ச்சி அடையாததால் ஏமாற்றமே கிடைத்துள்ளது.
ஏற்கெனவே, போதிய விலை, வெட்டும் கூலி கிடைக்காததால் சர்க்கரை அரவை ஆலைக்குப் பயிரிடப்படும் கரும்பு 50 சதவீதம் குறைந்து விட்டது. தற்போது சர்க்கரை ஆலை கரும்பைப் போல், செங்கரும்பு சாகுபடி பரப்பும் வரும் ஆண்டில் குறைய வாய்ப்புள்ளது என்றார். இது குறித்து வேளாண் துறை துணை இயக்குநர் தங்கராஜிடம் கேட்டபோது, வறட்சியால் திண்டுக்கல் மட்டுமில்லாது தமிழகம் முழுவதுமே செங்கரும்பு வளர்ச்சி இந்த ஆண்டு குறைந்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT