Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM
பெண் இன்ஜினீயரை கொலை செய்துவிட்டு கொல்கத்தா தப்பிச் சென்ற 2 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் ஏற்கெனவே பிடிபட்ட 2 பேரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணி புரிந்த சாப்ட்வேர் இன்ஜினீயர் உமா மகேஸ்வரி (23), கடந்த 13-ம் தேதி கொலை செய்யப்பட்டார். அவரது உடல், அழுகிய நிலையில் சிப்காட் வளாகத்தில் உள்ள புதரில் இருந்து 22-ம் தேதி மீட்கப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிப்காட் வளாகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள்தான் உமா மகேஸ்வரியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. அவர்களில் ராம் மண்டல்(23), உத்தம் மண்டல் ஆகியோர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அவர்களது கூட்டாளிகளான உஜ்ஜல் மண்டல், இந்திரஜித் மண்டல் ஆகியோர் ரயிலில் கொல்கத்தாவுக்கு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதையடுத்து, கொல்கத்தாவுக்கு சென்ற தனிப்படை போலீஸார், அங்கு இருவரையும் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களை இன்று சென்னை அழைத்து வருகின்றனர்.
குற்றவாளிகள் பிடிபட்டது குறித்து சிபிசிஐடி ஐ.ஜி மகேஷ் குமார் அகர்வால் கூறியதாவது:
பெண் இன்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க ஏடிஎம் சென்டரில் இருந்த கண்காணிப்பு கேமரா உதவியது. உமா மகேஸ்வரி வைத்திருந்த செல்போன் மற்றும் கிரெடிட் கார்டை கொலையாளிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
வழியில் இருந்த இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்க முயன்றுள்ளனர். அப்போது ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் உத்தம் மண்டேலின் உருவம் பதிவாகி உள்ளது. அவர் சிவப்பு நிறச் சட்டை அணிந்திருந்தார். அந்தக் கேமரா காட்சியை வைத்து அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, துப்புக் கிடைத்தது. அதனடிப்படையில் குற்றவாளிகளை கைது செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
7 நாள் போலீஸ் காவல்
இதற்கிடையே, செவ்வாய்க் கிழமை கைது செய்யப்பட்ட ராம் மண்டல், உத்தம் மண்டல் ஆகியோர் செங்கல்பட்டு நீதிமன் றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து நீதிபதி அங்காளீஸ்வரி உத்தர விட்டார். இதையடுத்து அவர்களை போலீஸார் தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
ரயிலில் சென்றவர்களை பிடிக்க விமானத்தில் பறந்த சிபிசிஐடி
போலீஸார் தேடுவதை அறிந்ததும் உஜ்ஜன் மண்டல், உத்திரராஜ் மண்டல் இருவரும் கொல்கத்தா தப்பிச் செல்ல நினைத்து திங்கள்கிழமை இரவு ஹவுரா எக்ஸ்பிரஸில் ஏறினர். அவர்களை கும்மிடிப் பூண்டியில் பிடிக்க முதலில் திட்டமிடப்பட்டது.
பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இருவ ரையும் பிடிக்க சிபிசிஐடி தனிப்படையினர் செவ்வாய்க் கிழமை இரவு விமானம் மூலம் கொல்கத்தா சென்றனர். புதன்கிழமை அதிகாலை 4.10 மணிக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ், கோரக்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.
அங்கு தயாராக காத்தி ருந்த சிபிசிஐடி போலீஸார், முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்த உஜ்ஜன் மண்டல், உத்திரராஜ் மண்டல் இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT