Published : 12 Apr 2017 07:47 AM
Last Updated : 12 Apr 2017 07:47 AM

மெட்ரோ ரயில் பணிகளால் அடுத்தடுத்து பள்ளம் ஏற்படுவது ஏன்? - மண்ணியல் துறை வல்லுநர்கள் விளக்கம்

மெட்ரோ ரயில் பணிகளால் சாலையில் அடுத்தடுத்து பள்ளம் ஏற்படுவது ஏன்? இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து மண்ணியல் துறை வல்லுநர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னையில் 2 வழித்தடங்களில் 36 கி.மீ. நீள சுரங்கப்பாதை வழியாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கடந்த 9-ம் தேதி அண்ணா மேம்பாலம் அருகே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் அரசு பஸ்ஸும், காரும் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று காலையில் அதே பகுதியில் மீண்டும் சாலையில் விரிசல் ஏற்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து நடக்கும் இதுபோன்ற சம்பவங்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது குறித்து சென்னை ஐஐடி மண்ணியல் துறை பேராசிரியர் டாக்டர் பூமிநாதன் கூறும்போது, ‘‘சுரங்கம் தோண்டும் பணியின்போது பள்ளம் ஏற்படுவதற்கு மண் தளர்வாக இருப்பது ஒரு காரணம். அதே சமயத்தில் சுரங்கம் தோண்டும் ராட்சத இயந்திரங்களின் அழுத்தம் சீராக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அழுத்தம் அதிக மாகவோ, குறைவாகவோ இருந்தாலும் சாலையில் பள்ளம் ஏற்படும். எனவே, இயந்திரங்களின் இயக்க அழுத்தத்தை தொடர்ந்து பணியாளர்கள் கண்காணிக்க வேண்டும்’’ என்றார்.

அண்ணா பல்கலைக்கழக மண்ணியல் துறை பேராசிரியர் வி.கே.ஸ்டாலின் கூறும்போது, ‘‘சென்னையில் செம்மண், சரளை மண் மற்றும் சில இடங்களில் களிமண் இருக்கிறது. இந்த மண் வகைகள் பாதுகாப்பானவை. இதனால், மெட்ரோ ரயிலை பாதுகாப்பாக இயக்க முடியும். சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க, சுமார் 25 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டப்படுகிறது. இப்படி சுரங்கம் தோண்டும்போது, மண் பலவீனமாக இருக்கும் சில இடங்களில் திடீரென பள்ளம் ஏற்படுகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க சுரங்கம் தோண்டும்போது பக்கவாட்டை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ‘‘சர்வதேச அளவில் உள்ள சிறந்த தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டு மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயம்பேடு நேரு பூங்கா இடையே சுரங்கப் பாதையில் தற்போது சோதனை அடிப்படையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சுரங்கப் பாதையில் பணிகளை மேற்கொள்ளும்போது சில இடங்களில் மண் வலுவிழப்பதால் திடீ ரென பள்ளம் ஏற்படுகிறது. கனமழை பெய்தாலும், நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலை இயக்குவதில் எந்த பாதுகாப்பு குறைபாடும் ஏற்படாது. மண் வலுவிழப்பு ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் ஜெர்மன், அயர்லாந்து நாடு களின் தொழில்நுட்ப வசதிகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. விரைவில் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப் படும். இனியும் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x