Published : 13 Jun 2017 10:52 AM
Last Updated : 13 Jun 2017 10:52 AM
கேரள மாநிலம், பாலக்காடு மாவட் டம் அட்டப்பாடியில் உள்ளது தேக்குவட்டை கிராமம். பவானி பாயும் இந்த கிராமத்தில்தான் சர்ச்சைக்குரிய முதல் தடுப்பணையை கேரள அரசு கட்ட, தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க சுணக்கம் நிலவ, தேக்குவட்டைக்கு அருகாமை கிராமமான மஞ்சிக்கண்டியிலும் அடுத்த தடுப்பு அணையை கட்டி முடித்தது கேரளா.
இந்த இரண்டு அணைகளில் நீர் தேங்க கேரள பகுதிகளில் தேக்குவட்டைக்கு கீழுள்ள சாவடி யூர், முள்ளி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் பவானி ஆறு வறண்டது. இந்த பிரச்சினைக்கெல்லாம் தீர்வாக ஜூன் மாதத்தில் பெய்யவிருக்கும் தென்மேற்கு பருவமழை இருக்கும் என எதிர்பார்த்தனர் விவசாயிகள். இந்த சூழ்நிலையில் கடந்த 2 நாட்களாக பவானியில் வந்த வெள்ளம் மஞ்சிக்கண்டி, தேக்குவட்டை புதிய அணைகளை மூழ்கடித்துக் கொண்டு ஓடுகிறது.
இது குறித்து இப்பகுதி விவசாயி கள் ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது: தற்போது சைலண்ட் வேலி சோலைக்காடுகளில் ஓரளவுக்கு மழை பெய்கிறது. எனவேதான் பவானியில் தண்ணீர் வருகிறது. இந்த மழை மே கடைசி வாரத்திலேயே வந்திருக்க வேண் டும். ஜூன் பிறந்ததும் இங்குள்ள கிராமங்கள் அனைத்திலும் கடுமையான மழை பொழிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது வரை தாவளத்திற்கு கீழுள்ள கிராமங்கள் எங்கும் மழையே இல்லை. இடி, மின்னல் தூறல் அவ்வப்போது வருகிறது.
பொதுவாக இந்த நேரத்தில் சாளைகளில் உள்ள மாடு, கன்றுகளையே வெளியே மேய்ச்சலுக்கு விட முடியாத அளவு கடும் மழை இருக்கும். பவானியை சார்ந்துள்ள மற்ற நீரோடைகள், பள்ளங்கள் எல்லாம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இப்போது அப்படி இல்லை. பவானியின் கிளை ஓடைகள் எல்லாம் காய்ந்துதான் கிடக்கின்றன. இதே நிலைமைதான் போன வருஷமும் இருந்தது. அதனால் கடும் வறட்சியை சந்தித்தோம். இந்த வருடமாவது வழக்கம்போல மழை பொழியும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT