Published : 10 Sep 2016 02:58 PM
Last Updated : 10 Sep 2016 02:58 PM
அதிமுகவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் நேர்காணல் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தலை அக்.24-க்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதிமுக ஆளும்கட்சியாக இருப்பதால் கவுன்சிலர், தலைவர் பதவிகளுக்கு வர அக்கட்சி நிர்வாகிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றி பலமான எதிர்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளதால் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமான இடங்களில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை அக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது. திமுகவில் மாநகராட்சி, நகராட்சி, ஒன்றியம், பேரூர் வாரியாக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடக்கத் தொடங்கியுள்ளதால் கட்சி நிர்வாகிகளிடையே சீட் பெறுவதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடிந்த நிலையில் வேட்பாளரை அடையாளம் காணும் பணி நடக்கிறது. இந்த முறை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை வெற்றி பெறும் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்க உள்ளதால் தலைவர் தேர்தலில் திரைமறைவு குதிரைபேரம் நடக்கலாம். அதனால், நம்பிக்கைக்கு உரிய கட்சி விசுவாசிகளை மட்டுமே வேட்பாளராக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
தற்போது முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதற்கு ஒவ்வொரு வார்டுக்கும் 3 ஆண்கள், ஒரு பெண் என 4 பேர் கொண்ட உத்தேச வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது . இதில் இருந்து 2 பேரை இறுதி செய்து, அந்த பட்டியலை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்க மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கியதும் வார்டு வாரியாக பட்டியலில் இடம்பெற்ற 2 பேருக்கு அந்தந்த மாவட்டங்களில் நேர்காணல் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இதில் இருந்து ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்து அவருக்கு கட்சி சார்பில் போட்டியிட விண்ணப்பம் வழங்கவும், இரண்டாவது நபரை பரிசீலனைக்கு உரியவராக காத்திருப்போர் பட்டியலில் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் வேட்பாளர் நீக்கப்பட்டால் அடுத்தவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT