Published : 23 Mar 2017 12:32 PM
Last Updated : 23 Mar 2017 12:32 PM

தற்கொலை செய்த விவசாயி குடும்பத்துக்கு ரூ.850 மட்டுமே வறட்சி நிவாரணம்

வறட்சியால் மஞ்சள் பயிர் கருகுவதைக் கண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயி குடும்பத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.850 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகா தாமரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.முத்துசாமி(77). இவர் தனக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்திலும், குத்தகைக்கு எடுத்த மூன்றரை ஏக்கர் நிலத்திலும் மஞ்சள் பயிரிட்டு இருந்தார். பருவமழை பொய்த்துப் போனதால், வறட்சியால் மஞ்சள் பயிர் கருகியது. குத்தகை தொகை, இடுபொருட்களுக்கான செலவு என கடன் வாங்கி விவசாய பணியை மேற்கொண்ட முத்துசாமி, மனமுடைந்து தனது விவசாய நிலத்திலேயே விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட ரூ.1.25 லட்சம் நிவாரணத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை.

இதுகுறித்து காலிங்கராயன் மதகு பாசன விவசாயிகள் சபை செயலாளர் ஆர்.செல்வகுமார் கூறியதாவது: வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயி முத்துசாமிக்கு ரூ.1.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். ஆனால் அந்தத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் தொடர்ந்து இதுகுறித்து தெரிவித்தும், உரிய பதிலோ, விளக்கமோ கிடைக்கவில்லை.

வறட்சி நிவாரணத்தைப் பொறுத்தவரை முத்துசாமி இறந்துவிட்டதால், அவரது பெயரில் உள்ள 20 சென்ட் விவசாய நிலத்துக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அவரது மகன் கணேசன் பெயரில் உள்ள 20 சென்ட் நிலத்துக்கு மட்டும் ரூ.850 வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. குத்தகை பாசனம் செய்த நிலத்துக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. தற்கொலை செய்துகொண்ட மற்றொரு விவசாயியான ராமலிங்கத்தின் குடும்பத்துக்கு இதுவரை வறட்சி நிவாரணம் கிடைக்கவில்லை.

ஈரோடு காலிங்கராயன் பாசனப் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 2 முதல் 3 ஏக்கர் பாதிப்பு உள்ள விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை வறட்சி நிவாரணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 4 பேரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1000, 2 பேரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2000 திரும்ப எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கியோ, அரசு அதிகாரிகளோ எந்த விளக்கமும் தர மறுக்கின்றனர்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்த விவசாயி களுக்கு மட்டுமே வறட்சி நிவாரணம் கிடைத்துள்ளது. தனியார் வங்கியில் கணக்கு வைத்திருந்தோருக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை.

வறட்சி கணக்கெடுப்பு செய்யப்பட்ட விவசாயிகளில் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x