Published : 10 Feb 2014 08:20 AM
Last Updated : 10 Feb 2014 08:20 AM
இளைஞர் படைக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்குகிறார். இந்தப் படைக்கு தேர்வாகியுள்ள 10,099 பேருக்கு வரும் 12-ம் தேதி முதல் பயிற்சிகள் தொடங்குகின்றன.
தமிழக காவல் துறையினருக்கு உதவியாக இளைஞர் படை உருவாக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். தமிழகம் முழுவதும் இருந்து முதல்கட்டமாக 10,099 பேர் இளைஞர் படைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. தேர்வானவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியில் டிஜிபி ராமானுஜம், முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு வரும் 12-ம் தேதி முதல் பயிற்சிகள் தொடங்குகின்றன. இவர்களுக்கு காவல் துறையினரைப் போலவே காக்கிச் சட்டை மற்றும் பேன்ட், காக்கி தொப்பி, கருப்பு ஷு, பெல்ட், விசில் வழங்கப்படும். மாதச் சம்பளமாக ரூ.7,500 வழங்கப்படும். காவல் துறையில் ஓட்டுநர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தபால் வேலை, ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT