Last Updated : 30 Mar, 2017 11:16 AM

 

Published : 30 Mar 2017 11:16 AM
Last Updated : 30 Mar 2017 11:16 AM

டீசல் விலையேற்றத்தால் அரசு பஸ்களில் மறைமுக கட்டண உயர்வு: பயணிகள், நடத்துநர் தினமும் மோதல்

டீசல் விலை உயர்வுக்கு பிறகு அரசு பஸ்களில் மறைமுகமாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தினமும் பயணிகள், நடத்துநர் இடையே தகராறு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு கடந்த 4-ம் தேதி உயர்த்தியது. பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரி 21.43 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3.78 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.1.76 உயர்த்தப்பட்டது. டீசல் விலை உயர்வால் போக்குவரத்துக் கழகங்களுக்கு மாதம் ரூ.9.21 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. டீசல் விலை உயர்வால் வருவாய் இழப்பு அதிகரிப்பை தடுக்க அரசு போக்குவரத்துக்கழகங்களில் ரூ.3, ரூ.5 கட்டண பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, அந்த பஸ்கள் கூடுதல் கட்டண பஸ்களாக மாற்றி இயக்கப்பட்டு வருகிறது. தொலை தூர பஸ் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் விலை உயர்வுக்கு முன்பு மதுரையில் இருந்து திண்டு க்கல்லுக்கு அரசு பஸ்களில் ரூ.28 வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பஸ்களில் ரூ.30 ஆக இருந்த கட்டணம், தற்போது ரூ.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று பல்வேறு ஊர்களுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இல்லாமல் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் தினமும் பஸ்களில் பயணிகளுக்கும், நடத்துநர்களுக்கும் தகராறு ஏற் படுகிறது. திண்டுக்கல்லைச் சேர்ந்த பாலாஜி கூறுகையில், “பஸ்களில் கடந்த இரு வாரமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்னறிவிப்பு இல்லாமல் கட்டணம் உயர்த்தியுள்ளனர்.

பஸ் கட்டணம் உயர்வு தொடர்பாக பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டால் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதற்காக மறைமுகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தெரியாமல் பஸ்ஸில் ஏறியதும் கூடுதல் கட்டணம் கேட்கும் போது பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர்” என்றார்.

போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, “டீசல் விலை உயர்வை ஈடுகட்டுவதற்காக பஸ் கட்டணம் உயர்த்தவில்லை. பஸ்ஸில் உள்ள வசதிக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x