Last Updated : 21 Mar, 2017 02:47 PM

 

Published : 21 Mar 2017 02:47 PM
Last Updated : 21 Mar 2017 02:47 PM

"சசிகலாவால் பாதிக்கப்பட்டோர் நிறைய பேர் இருக்கிறார்கள்": கங்கை அமரன் சிறப்புப் பேட்டி

அதிமுக, திமுகவைத் தாண்டி தமிழக மக்கள் மாற்று அரசியலுக்கு தயாராகிவிட்டதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அத்தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கும் கங்கை அமரன் 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்காக அளித்திருக்கும் சிறப்புப் பேட்டி.

தமிழக பாஜகவில் பல முகங்கள் இருந்தும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களை வேட்பாளராக முன்னிறுத்தக் காரணம் என்ன?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் யாரை களமிறக்குவது என்ற ஆலோசனை நடைபெற்றபோது அனைவரும் ஒருமனதாக எனது பெயரை முன்மொழிந்தனர். கட்சியில் இணைந்த நாள்முதலே ஒரு தொண்டனாக கட்சிப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான அங்கீகாரமே அது. ஏற்கெனவே கலைத்துறையில் பிரபலமானவர், மக்களால் நன்கு அறியப்பட்டவர் என்பதைத் தாண்டியும் பாஜக உண்மைத் தொண்டரை அங்கீகரிப்பதில் முன்மாதிரியாக செயல்படுகிறது. அந்த அடிப்படையிலேயே நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறேன்.

சசிகலாவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர் என்பதால் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறதே..

சசிகலாவால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். அதற்காக என்னை முன்னிறுத்த வேண்டுமானால் 'சசிகலாவால் பாதிக்கப்பட்டோர் சங்கம்' என்று ஒன்றை நிறுவி, என்னை அதற்குத்தான் தலைவராக்கியிருக்க வேண்டும். பாஜக எனக்குக் கொடுத்திருக்கும் அங்கீகாரம் என்னுடைய கட்சி சார்ந்த உழைப்புக்கானது.

அதனால், எனது பிரச்சாரம் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தியே இருக்குமே தவிர சொந்தப் பிரச்சினைகளை முன்னிறுத்தி இருக்காது.

உங்கள் வெற்றி வாய்ப்பு குறித்து சொல்லுங்கள்..

அதிமுக, திமுகவைத் தாண்டி தமிழக மக்கள் மாற்று அரசியலுக்குத் தயாராகிவிட்டனர். உண்மையான அதிமுக எது என்பது தெரியாத அளவுக்கு மக்கள் குழப்பத்தில் உள்ளனர். மக்களிடம் அரசியல் தேடல் ஏற்பட்டிருக்கிறது. அந்த தேடலுக்கான விடைதான் பாஜக. பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் நிச்சயம் மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று பாஜக தமிழகத்தில் கணக்கை துவக்குமா?

இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிடுவதால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துவிடப்போவதில்லை. ஆனால், தமிழகத்தில் பாஜக பெறும் வெற்றி ஒரு விதை. இந்த விதை நாளை மக்களுக்கு நலன் தரும் விருட்சமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

ஆர்.கே.நகர் தொகுதியின் பிரதான பிரச்சினையாக நீங்கள் பார்ப்பது?

ஆர்.கே.நகரில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறை, போக்குவரத்து நெரிசல், எண்ணெய்க் கிணறுகளில் கசிவு என அடுக்கிக் கொண்டே போகலாம். நான் இத்தொகுதியில் வெற்றி பெற்றவுடன் பிரச்சினைகளின் அவசரம் கருதி அவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து தீர்த்துவைப்பேன்.

இத்தொகுதியில், அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். அவருக்கு இத்தொகுதி மிகவும் பரிச்சயமானதே. மேலும், அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார். அவர் நினைத்திருந்தால், இத்தொகுதிக்கு நிறைய செய்திருக்கலாம். மக்கள் நலப் பணிகளை மேற்கொள்ள எம்.எல்.ஏ.வாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

ஆனால், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க யாருக்கும் மனமில்லை என்பதே உண்மை. அவரவர் பிரச்சினைகளிலேயே அதிக கவனம் செலுத்தியிருக்கின்றனர்.

ஆரம்ப நாட்களில் கம்யூனிஸ்ட் மேடைகளில் பிரச்சார பாடல்களைப் பாடியிருக்கிறீர்கள். இப்போது கம்யூனிஸ்ட் சித்தாந்தத்துக்கு நேர் எதிர் கொள்கையுடைய கட்சிக்காக பிரச்சாரத்தில் இறங்கவுள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள்.

நான் எப்போதும் கம்யூனிஸ்டாக உணர்ந்ததில்லை. என் அண்ணன் பாவலர் வரதராசன் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். அவரிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்வதற்காக மட்டுமே நாங்கள் கம்யூனிஸ்ட் மேடைகளில் அமர்ந்தோமே தவிர கம்யூனிஸ்ட் கொள்கைகளை கற்றுக் கொள்வதற்காக அல்ல. கம்யூனிஸ்ட் கட்சிக்கு, உழைத்தவர்களை காப்பாற்றத் தெரியாது. என் அண்ணனுக்கு அவர்கள் ஏதும் செய்யவில்லை. நான் எப்போதுமே கம்யூனிஸ்டாக இருந்ததில்லை.

தற்போதிய தமிழக அரசியல் நிலவரம் குறித்து உங்கள் பார்வை..

ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியல் களத்தில் நிச்சயமாக ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவைப் போல் நடை, உடைகளை மாற்றிக் கொள்பவர்களால் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது. தான் நினைத்ததை துணிச்சலுடன் செய்த ஜெயலலிதாவுக்கு மாற்று கிடையாது. கருணாநிதி ஓய்வு பெற்றுவரும் நிலையில் திமுக செயல் தலைவராக ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருக்கின்றன.

தமிழகத்தில் திராவிடத்தை மீறி பாஜக வேரூன்றுமா? பாஜக மீதான மத அடையாளம் மாறுமா?

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. அங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் வாக்களிக்காமலா பாஜக இந்த வெற்றியை பெற்றிருக்கும்.

தமிழகத்திலும் மாற்றம் நிகழும். பாஜக மீதான மத அடையாளம் பிறரால் உருவாக்கப்பட்டது. இதைக்கூறியே,நல்ல திட்டங்களைக்கூட விமர்சிக்கிறார்கள். நல்லது எங்கிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மோடி என்ற வலுவான தலைவரின் நலத்திட்டங்களை ஏற்றுக் கொள்ள தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். மக்கள் இனியும் பணத்துக்கு பணிய மாட்டார்கள். மாற்றம் தொடங்கிவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x