Last Updated : 01 Feb, 2017 09:10 AM

 

Published : 01 Feb 2017 09:10 AM
Last Updated : 01 Feb 2017 09:10 AM

ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாட திருச்சி இளைஞர்கள் புதிய முயற்சி: வளர்ச்சிப் பாதையைக் காட்டும் முகநூல் நண்பர்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கிடைத்த வெற்றியை ஆக்கபூர்வமான முறையில், மரக்கன்றுகளை நடுவது, பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு என சமூகத்தை உயர்த்தும் நோக்கில் கொண்டாடி வருகின்றனர் திருச்சியைச் சேர்ந்த முகநூல் நண்பர்கள் குழுவினர்.

Trichy Memes, I Love Trichy, Trichynopoly, Trichyportal, My Trichy ஆகிய முகநூல் குழுக்களைச் சேர்ந்த நண்பர்கள், ‘ஒளிரும் திருச்சி’ (Shine Treechy) அமைப்பினருடன் இணைந்து மரக்கன்று நடுதல் மற்றும் இலவசமாக மரக்கன்று அளித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

‘ஒளிரும் திருச்சி’ அமைப்பினர், ஏற்கெனவே கல்லணை பகுதியில் ஆற்றங்கரையோரம் சுமார் ஒரு ஏக்கரில் சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றிய துடன், முக்கொம்பில் இருந்து முத்தரசநல்லூர் வரை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்கும், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் குளக்கரையிலும் சுமார் 2,500 பனை விதைகளை நட்டுள்ளனர். அவை, தற்போது வளர்ந்து வருகின்றன.

திருச்சி முகநூல் நண்பர்கள் குழுவினர், மரம் வளர்ப்பு மட்டுமின்றி, அதிக அளவில் ஆக்ஸிஜனை அளிக்கும் துளசிச் செடிகளை அடுக்குமாடி குடி யிருப்புவாசிகளுக்கு விநியோகித்து வருகின்றனர். மேலும், பாலித்தீன் பைகளை ஒழிப்பதற்காக துணிப் பைகளையும் மக்களுக்கு அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின் றனர்.

தங்களின் சேவைகள் குறித்து திருச்சி முகநூல் நண்பர்கள் குழுவினர் கூறியதாவது:

‘ஒளிரும் திருச்சி’ அமைப்பு சார்பில் பாலித்தீன் ஒழிப்பு, மாநகரின் தூய்மை, மரம் வளர்ப்பு என சமூக மேம்பாட்டுக்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஏற்கெனவே ஈடுபட்டு வருகிறோம்.

மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்தால் சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஜல்லிக்கட்டு போராட்டம் வெளிக்காட்டியதால், அந்த வெற் றியை ஆக்கபூர்வமாக கொண் டாடும் வகையில் செயல்படுவது என திட்டமிட்டோம். அதன்படி, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் மழை பெய்ய மரங்கள் அவசியம் என்பதை உணர்ந்து மாணவர்கள் ஓர் இயக்கமாக ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ‘மரங்கள் வளர்ப்போம்- ஏறு தழுவுதலின் வெற்றியைக் கொண்டாடுவோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து தற்போது களமிறங்கியுள்ளோம்.

மரக்கன்றுகளை நடுவதுடன் நின்றுவிடாமல், தொடர்ந்து 2 ஆண் டுகளுக்கு அதன் வளர்ச்சியைக் கண்காணித்து வருகிறோம். கடந்த ஆண்டு திருச்சி மாநகரப் பகுதியில் வைத்த 280 மரக்கன்றுகளில் 250 மரக்கன்றுகள் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன.

அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, குறைந்தது 2 ஆண்டுகள் வரை தொடர்ந்து பராமரிக்க விரும்புவோர் 7402410045 என்ற எண்ணில் தொடர்புகொண்டாலோ அல்லது வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தாலோ மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறோம். இந்தச் சேவைக்கு உதவ நினைப்பவர்களிடம் இருந்து பணமாகப் பெறுவதில்லை. அதற்குப் பதிலாக மரக்கன்றுகள் அல்லது மரக்கன்றுகளைப் பாதுகாக்கும் வேலிகளை மட்டுமே பெறுகிறோம் என்றனர்.

சமூக அக்கறைக்குப் பாராட்டு

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் சில தினங்களுக்கு முன், மாநகரக் காவல் துணை ஆணையர் (சட்டம்- ஒழுங்கு) ஏ.மயில்வாகனன், மரக்கன்றை நட்டுவைத்து இந்தச் சேவையை தொடங்கிவைத்துப் பேசும்போது, “நமது நாட்டில் 33 சதவீத காடுகள் இருக்க வேண்டிய நிலையில், நகரமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 20 சதவீதம் காடுகளே உள்ளன. எனவே, மரம் வளர்ப்பு மிகவும் அவசியமானது.

தண்ணீர், காற்று, சுற்றுப்புறச் சூழல் மாசடைவதைக் கண்டுகொள்ளாமல் செல்வது என்பது வருங்காலச் சமூகத்துக்கு நாம் பெருங்கடனை விட்டுச் செல்வது போன்றது. சமூக அக்கறையுடன், இணையதளம் மூலம் ஆக்கபூர்வ பணிகளையும் மேற்கொள்ள முடியும் என்பதை பிறருக்கு உணர்த்தியுள்ளது திருச்சி முகநூல் நண்பர்கள் குழு” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x