Last Updated : 25 Mar, 2017 12:05 PM

 

Published : 25 Mar 2017 12:05 PM
Last Updated : 25 Mar 2017 12:05 PM

மேட்டூர் அணையைத் தூர்வார ‘வாப்காஸ்’ நிறுவனம் ஆய்வு: விரைந்து பணியை தொடங்கினால் நீர் மேலாண்மைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை பசுமையாக்கும் நீராதாரமாக விளங்கும் மேட்டூர் அணை, வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி மணல் பரப்பாகக் காணப்படுகிறது. அணையை தூர்வார ‘வாப்காஸ்’ நிறுவனம் ஆய்வு செய்து வரும் நிலையில், விரைந்து பணியை தொடங்கினால், நீர் மேலாண்மைக்கான வாய்ப்பாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றாக திகழும் மேட்டூர் அணையை நம்பி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 28.51 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 49 கனஅடியாகவும், குடிநீர் தேவைக்காக தண்ணீர் வெளியேற்றம் 500 கனஅடியாகவும் உள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்த நிலையில், வறட்சியின் கோரப்பிடியால் மணல், சேறு, சகதியாக காட்சியளிக்கிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 28 அடி என்றாலும், சகதியும், வண்டல் மணலும் 18 அடி உயரம் வரை இருக்கும். இதனை தூர்வாருவதன் மூலம் குறைந்தபட்சம் 10 முதல் 15 உயரம் வரை நீரை தேக்க வாய்ப்பு உள்ளது என விவசாய சங்கங்கள் தெரிவித்து, தூர்வார மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து மேட்டூர் அணை பொறியாளர்களிடம் கேட்டபோது, ‘‘மேட்டூர் அணையை தூர்வாரும் முயற்சியை அரசு எடுத்துள்ளது. ‘வாப்காஸ்’ என்ற தனியார் நிறுவனம் மேட்டூர் அணையை தூர்வார தேவையான ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணி முடிந்ததும், அணையை தூர்வார தேவையான அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விரைந்து அணையை தூர்வாரும் நடவடிக்கை நடந்து வருகிறது’’ என்றனர்.

மேட்டூர் அணை கடந்த 1934-ம் ஆண்டு ஆங்கிலேயே ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. அணையின் மொத்த உயரம் 124 அடி. அணையின் பாதுகாப்பு கருதி 120 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 83 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை தூர்வாரும் நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. எனவே, மேட்டூர் அணையை விரைந்து தூர்வாருவதன் மூலம் நீர் மேலாண்மைக்கான நல்ல வாய்ப்பாகவும், வறட்சி காலத்தில் கூடுதலாக தண்ணீர் தேங்கி நிற்க வழி ஏற்படும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x