Last Updated : 01 Sep, 2016 05:32 PM

 

Published : 01 Sep 2016 05:32 PM
Last Updated : 01 Sep 2016 05:32 PM

தென்மாவட்டங்களில் வேலையின்றி திரியும் இளைஞர்களால் விபரீதம்: நடவடிக்கை எடுக்கத் தயங்கும் போலீஸார்

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வேலையின்றி சுற்றித்திரியும் இளைஞர்களால் பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இத்தகைய இளைஞர்கள் பெண்களை கேலி, கிண்டல் செய்வதை போலீஸார் தடுக்க தவறியதால் இந்த விவகாரத்தில் பல இளம்பெண்கள் பலியாக நேர்ந்திருக்கிறது.

சுவாதி கொலை

சென்னையில் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டபோது தென்மாவட்ட இளைஞர்களை குறித்து பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டன. இங்கு பல்வேறு விவகாரங்களில் கொலை சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில்தான் தூத்துக்குடியில் ஒரு தலை காதல் விவகாரத்தில் ஆசிரியை பிரான்சிஸ்கா கொலை செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் ஒருசில நாட்களில் திருமண வாழ்க்கையில் ஈடுபடவிருந்த அவரை, கொடூரமாக கொலை செய்யும் அளவுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் கீகன் சென்றுள்ளார்.

வேலைவாய்ப்பில்லை

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள், படிப்பை பாதியில் நிறுத்திய இளைஞர் கள், வேலையிலிருந்து பாதியில் நிறுத்தப்பட்ட இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம். வேலை யின்மையே தென் மாவட்டங்களில் நிலவும் ஜாதி மோதல் உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு காரணமாகிறது.

இளைஞர்கள் பலரும் 120 சிசி, 150 சிசி மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக பறப்பது, காதுகளை செவிடாக்கும் ஹாரன்களை பொருத்திக்கொண்டு, பெண்களின் கவனத்தை திசைதிருப்ப அவற்றை ஒலிக்க வைப்பது, மோட்டார் சைக்கிள்களில் 3 பேர் செல்வது, முக்கிய சந்திப்புகளில் சிக்னல் விளக்குகளை மதிக்காமல் செல்வது என்றெல்லாம் விதிமீறல்களில் இவர்கள் ஈடுபடுகிறார்கள்.

இவர்களை கண்டித்து திருத்தும் பணியில் பெற்றோர்களும் ஈடுபடுபடுவதில்லை. பெண்களிடம் இருந்து புகார்கள் வரப்பெற்றால் மட்டுமே நடவடிக்கை எடுப்பது என்று போலீஸாரும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதுவும் பல்வேறு சமூக சிக்கல்களுக்கு காரணமாக மாறியிருக்கிறது.

கமிட்டிகள் பரிந்துரை

தென்மாவட்டங்களில் ஜாதி கலவரம், அதன் விளைவாக நீடித்த கொலை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டுவதற்கு இங்கு தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று பல்வேறு கமிட்டிகளும் அரசுகளுக்கு பரிந்துரை அளித்திருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. அவ்வாறு வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் ஓரளவுக்கேனும் குற்றச்செயல்களை குறைக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

காவல்துறை அலட்சியம்

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கிராமங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரையில் வேலையின்றி சுற்றித்திரியும் இளைஞர்கள் பெண்களை கேலி கிண்டல் செய்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் காவல்துறை முழுவீச்சில் ஈடுபட வேண்டும். தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் கண்டிக்க தவறும்போதுதான் குற்றச்செயல்களில் அவர்கள் ஈடுபட துணிந்துவிடுகிறார்கள். எனவே பெற்றோர்களும் சமூக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

இது குறித்து பாளையங்கோட்டையை சேர்ந்த பொறியியல் மாணவர் கே. கார்த்திக் (24) கூறும்போது, ``சரியான குறிக்கோள் இல்லாத இளைஞர்கள்தான் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களது திறமைகளை நல்வழிப்படுத்த வேண்டும். இளைஞர்களால் துன்புறுத்தல்கள் இருக்கிறது என்றால் பெண்கள் உடனே இது குறித்து தங்கள் பெற்றோரிடமோ, காவல்துறையிலோ, கல்லூரி, பள்ளிகளிலோ தெரிவித்தால் பெரும்பாலான சம்பவங்களை தடுக்க முடியும். பெண்கள் அச்சப்பட்டு தங்களுக்குள் இதுபோன்ற விவகாரங்களை புதைத்து வைத்திருப்பதால் அது விபரீதங்களில் முடிகிறது. இளைஞர் களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதிலும் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார் அவர்.

பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு: வாசகர் குமுறல்

தூத்துக்குடியில் ஆசிரியை பிரான்சினா காலை 8.30 மணியளவில் கொலை செய்யப் பட்டதும், காலை 9.07 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதியில் செல்வராஜ் என்ற வாசகர் பேசினார்.

‘தமிழகத்தில் பெண்களை கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. அதனால் தான் பயமின்றி குற்றங்கள் நடக்கிறது. தற்போதுள்ள சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து, பெண்களை கொலை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை வழங்கினால் நிச்சயம் குற்றங்கள் குறையும்’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x