Published : 28 Jun 2019 03:34 PM
Last Updated : 28 Jun 2019 03:34 PM
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 90 ஊராட்சிகளிலும் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில் சில குறிப்பிட்ட கிராமங்களைத் தேர்ந்தெடுத்த மக்கள்நீதி மய்யம் கட்சியினர், அந்தந்த பகுதி சார் பிரச்னைகளைப் பட்டியலிட்டனர்.
பிரதான கட்சிகள் கிராம சபைக் கூட்டங்களை அதிக அளவில் கண்டுகொள்ளாத நிலையில், நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு தன் கட்சியினருக்கு அறிவுறுத்தி வருகிறார். இதன் ஓர் அங்கமாக நாகர்கோவிலை ஒட்டியிருக்கும் பறக்கை ஊராட்சிக்கு நேற்று (வியாழக்கிழமை) திடீர் விசிட் அடித்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஊரில் நிலவும் பிரச்னைகள் குறித்து பட்டியல் சேகரித்தனர்.
இதில் விவசாயப் பணிகளுக்கு நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாடு, இ-சேவை மையத்தில் மின்சார வசதி இல்லாதது என, மக்கள் புகார்ப் பட்டியல் வாசித்தனர். ஆனால் அவர்களுக்கே இந்த தகவல்களை சேகரிப்பது யார் என்ற விவரமும் தெரியவில்லை.
கிராம சபைக் கூட்டங்கள் அவ்வப்போது நடந்தாலும் பொதுமக்களிடம் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் பலரும் செல்வதில்லை. இந்த சூழலில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் மக்களுக்கான தேவைகளும் அதிக அளவில் இருந்தது. இதையெல்லாம் பட்டியலாக சேகரித்த மக்கள் நீதி மய்யத்தினர், மண்டல அலுவலர் தமிழ்செல்வி தலைமையில் பறக்கை ஊராட்சியில் இன்று நடந்த கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களின் பிரச்னைகளைக் கேள்விகளாக எழுப்பினர்.
அங்கிருந்த அதிகாரிகளும் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர். பறக்கை கிராமத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு யாரும் பொறுப்பில் இல்லாத நிலையில் நாகர்கோவிலில் இருந்துவந்து தங்களுக்காகப் பேசிய கமல் கட்சியினரை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்ததோடு, நன்றியும் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து நாகர்கோவில் தொகுதி பொறுப்பாளர்களும் மக்கள் நீதிமய்ய நிர்வாகிகளுமான ராஜசேகர், சுந்தர்ராஜ், கணேசன், சிதம்பரம், ஸ்டான்லி ஆகியோர் தொடர்ந்து அடுத்த ஊராட்சிக்குப் பயணப்பட்டனர்.
கமல்ஹாசனுக்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நகர்ப்புற பகுதிகளில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. அதேபோல் கிராமங்களிலும் கட்சியை வலுப்படுத்த அனைத்து கிராம சபைக் கூட்டங்களிலும் பங்கேற்று, கிராம மக்களின் குரலை ஒலிக்க தன் கட்சியினருக்கு கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT