Published : 28 Sep 2018 12:35 PM
Last Updated : 28 Sep 2018 12:35 PM
கொடைக்கானல் மலையில் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் ஆறு மணிநேரம் ஒற்றையடி பாதையில் நடந்துசென்று பெரியூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களின் குறைகளை திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய் கேட்டறிந்தார். பழங்குடி மக்கள் ஆரத்தி எடுத்து ஆட்சியரை வரவேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் போக்குவரத்து வசதி இல்லாத ஆதிவாசிகள் கிராமம் பல உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மாவட்டத்திற்குள் கிராமப்பகுதிகளில் ஆட்சியர் தலைமையிலான மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும்.
இதில் பெரும்பாலும் மலை கிராமங்களையே திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய் தேர்வு செய்து மக்கள் தொடர்பு முகாமை நடத்திவருகிறார். போக்குவரத்து வசதியில்லாத பல மலைகிராமங்களுக்கு அதிகாரிகளுடன் நடந்தே சென்று குறைகளை கேட்டு நிவர்த்தி செய்துவருகிறார்.
இந்நிலையில் புதன்கிழமை கொடைக்கானல் மலைப்பகுதியிலுள்ள பெரியூர் கிராமத்திற்கு செல்ல முடிவு செய்யப்பட்டது. செங்குத்தான மலைப்பாதையில் ஒற்றையடிப்பாதையில் 6 கிலோ மீட்டர் பயணிக்கவேண்டும் என்றவுடனேயே பல அலுவலர்கள் வர தயக்கம் தெரிவித்தனர்.
திண்டுக்கல் ஆட்சியரின் அலுவலக உதவியாளர், நேர்முக உதவியாளர் ஆகியோரையும் மலையில் நடக்க முடியாது என்பதால் உடன் வரவேண்டாம் என்றும் ஆட்சியரே அவர்களை தவிர்த்தார்.
கொடைக்கானல் வட்டாட்சியர் ரமேஷ், மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி, பயிற்சி ஆட்சியர் ஷேக்அப்துல்ரஹ்மான், வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டுராஜன் மற்றும் வனத்துறையினர், வேட்டைதடுப்பு காவலர்கள் உதவியுடன் வனப்பகுதியில் குறுக்கிடும் சிற்றோடைகள், செங்குத்தான மலைப்பாதை ஆகியவற்றை கடந்து பழங்குடி மக்கள் வசிக்கும் வெள்ளகவி ஊராட்சிக்குட்பட்ட கடப்பாறைகுழி மற்றும் பெரியூர் கிராமங்களுக்கு ஆறு மணிநேரம் நடைபயணமாக சென்றடைந்தார் திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய். அங்கு பழங்குடி மக்கள் ஆட்சியருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
மலைப்பகுதியில் உள்ள ஏலக்காய், எலுமிச்சை, காப்பி தோட்டங்களில் பணிபுரிந்துகொண்டும், வனப்பகுதியில் உள்ள தேன், ஈச்சமாறு உள்ளிட்டவற்றை சேகரித்து வாழ்க்கை நடத்துவதாகவும் தெரிவித்தனர். இங்கு விளையும் பொருட்களை தலைச்சுமையாகவும், குதிரைகள் மூலமும் கொண்டுசெல்வதாகவும், இதற்கு மாற்றாக தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், என்றனர். மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், அரசின் நலத்திட்டங்களை அனைவருக்கும் வழங்க வேண்டும் எனவும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய் கூறியதாவது: “மலைப்பகுதிக்குள் வசிக்கும் இவர்கள் தங்கள் கோரிக்கைகாக கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ, திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்திற்கோ வர வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் வனப்பகுதிக்குள் நடந்து சென்று பின் வாகனங்களில் ஏறி வரவேண்டும். இதனால் மிகவும் சிரமத்திற்குள்ளாவர். இதை கருத்தில் கொண்டு அலுவலர்களை அழைத்துக்கொண்டு ஆதிவாசிகள் கிராமத்திற்கு சென்று ஒட்டுமொத்த மக்களின் குறைகளை கேட்க நானே நேரில் சென்றுவிட்டேன்.
அப்போது தான் அவர்களின் சிரமத்தை உணரமுடியும். அனைத்து அதிகாரிகளும் வயது காரணமாக மலைப்பாதையில் நடக்க முடியாததால் மாவட்ட வன அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்ட சிலரை மட்டுமே அழைத்துவந்துள்ளேன். பழங்குடி மக்களின் குறைகள் அனைத்து கேட்கப்பட்டது.
இவற்றை நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது. சாலை வசதிகள் ஏற்படுத்துவது குறித்து வனத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் இணைந்து சாலை வழிகளை அளவீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும். வன உரிமைச் சட்டப்படி ஆதிவாசிகளுக்கு சான்று வழங்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT