Published : 11 Sep 2018 12:03 PM
Last Updated : 11 Sep 2018 12:03 PM
திருமணத்திற்கு முன்பே 100 பவுன் நகைகளை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டியதாக மணமகள் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மணமகனைப் போலீஸார் கைது செய்தனர். இதனால் புதன்கிழமை நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகேயுள்ள கடையக்குடியைச் சேர்ந்தவர் ராஜசேகர். ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவர், தற்போது திருச்சி காட்டூர் அம்மன் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் தனியார் பள்ளி ஆசிரியை. இவருக்கும், திருச்சி மாவட்டம் துவாக்குடி ராவுத்தான்மேடு பகுதியைச் சேர்ந்த என்.ஐ.டி. ஊழியரான சரவணன் மகன் மகேந்திரனுக்கும் செப்.12 (புதன்கிழமை) திருமணம் செய்துவைக்க முடிவு செய்யப்பட்டது.
வரட்தட்சணையாக 50 பவுன் நகைகள், காருக்குப் பதிலாக ரூ. 5 லட்சம் மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் தருமாறு மணமகன் குடும்பத்தினர் கேட்டுள்ளனர். இதற்கு மணமகள் வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். உறவினர்களிடம் அழைப்பிதழ்களும் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஆக. 22-ம் தேதி இரு தரப்பினரும் சேர்ந்து, திருச்சியிலுள்ள பிரபல ஜவுளிக்கடையில் மணப்பெண்ணுக்கு முகூர்த்தப் புடவை எடுக்கச் சென்றனர். அப்போது, மணமகன் வீட்டார் விலை குறைவாக பட்டுப்புடவை எடுக்க முயற்சித்துள்ளனர். ஆனால் ரூ.30 ஆயிரத்துக்கு குறையாமல் புடவை எடுக்கவேண்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது. இப்பிரச்சினை தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் திருமண ஏற்பாடுகள் தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு நிலவி வந்துள்ளது.
இந்நிலையில், வரதட்சணையாக 50 பவுனுக்குப் பதிலாக 100 பவுன் நகைகளை திருமணத்துக்கு முன்பே தரவேண்டும், இல்லாவிட்டால் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என மணமகன் குடும்பத்தினர் மிரட்டுவதாக மணமகளின் தந்தை ராஜசேகர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த செப்.7-ம் தேதி புகார் அளித்தார்.
அதன்பேரில் இரு தரப்பையும் அழைத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணமகன் மகேந்திரனைக் கைது செய்தனர்.
மேலும், இக்குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தந்தை சரவணன், தாய் பாப்பாத்தி, தங்கை மகாலட்சுமி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். இதனையடுத்து புதன்கிழமை நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT