Published : 19 Sep 2018 12:23 PM
Last Updated : 19 Sep 2018 12:23 PM
போளூர் அடுத்த படைவீடு அருகே மல்லிகாபுரம் கிராமத்தில் உள்ள மயானத்துக்கு பாதை வசதி இல்லாததால் கமண்டல நதியில் ஓடும் தண்ணீரில் நடந்து பிரேதங்களை சுமந்து செல்லும் அவலம் நீடிக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒன்றியம் படைவீடு ஊராட்சி மல்லிகாபுரம் கிராமத்தில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு மழைக் காலம் தொடங்கியதும், கவலையும் தொற்றிக்கொள்கிறது. அதற்கு முக்கியக் காரணம், உயிரிழக்கும் உறவினரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யும் போது ஏற்படும் இன்னல்களைச் சந்திப்பதுதான்.
கமண்டல நதியைக் கடந்து, உடலைச் சுமந்து செல்ல வேண்டும். அந்த நதியில் தண்ணீர் ஓடினால், உடலைச் சுமந்து செல்பவர்களும், தனது உயிரைப் பணயம் வைத்துச் செல்ல வேண்டும். அப்படித்தான், உடல்நலக்குறைவால் கடந்த 16-ம் தேதி உயிரிழந்த சின்னதுரையின் (41) உடலைச் சுமந்து செல்லும்போது ஏற்பட்டது. கழுத்தளவு உயரத்துக்கு சென்ற தண்ணீரில், அவரது உடலைச் சுமந்து சென்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, “ஆடித் திருவிழாவுக்காக செண்பகத்தோப்பு அணை திறக்கப்பட்டது. மேலும் மழையும் பெய்து வருகிறது. இதனால் கமண்டல நதியில் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. அந்த நதியைக் கடந்துதான், மயானத்துக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் நாங்கள் அவதிப்படுகிறோம். ஏன்? மழைக்காலத்தில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது என்று கூட கடவுளை வேண்டிக்கொள்பவர்களும் உள்ளனர். அந்தளவுக்குப் பரிதாபமான சூழ்நிலை உள்ளது. இறந்தவரின் உடலைச் சுமந்துகொண்டு நதியைக் கடக்கும்போது, தண்ணீரின் வேகம் அதிகரித்தால், சுமந்து செல்பவர்களும் உயிரிழக்கக்கூடிய நிலை ஏற்படும். மரண பயத்தில்தான், நதியைக் கடந்துசென்று திரும்புகிறோம்.
கமண்டல நதியில் அதிக அளவில் மணல் கொள்ளை நடைபெற்றுள்ளதால், ஆழமும் அதிகமாக இருக்கிறது. இதனால், எந்த இடத்தில் பள்ளம் இருக்கிறது என்பதைக் கணிக்க முடியாத நிலை உள்ளது. கிராம மக்களின் நலன் கருதி, பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் அல்லது தடுப்பணை கட்டி தண்ணீரைத் தேக்கினால், நதியில் செல்லும் தண்ணீரின் உயரம் மிகக் குறைவாகவே இருக்கும் என்று ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனாலும் எந்தப் பலனும் இல்லை. மேலும், மயானத்தில் தகன மேடை மற்றும் மின் விளக்குகள் அமைப்பதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மயானத்தின் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடக்கிறது. இது குறித்து அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்ப உள்ளோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT