Published : 15 Sep 2018 03:27 PM
Last Updated : 15 Sep 2018 03:27 PM

நாணயமற்ற எதிரிகளைச் சந்திக்க வியூகத்தை மாற்ற வேண்டும்: மதிமுக மாநாட்டில் கி.வீரமணி பேச்சு

இதற்கு முன் நாம் சந்தித்த எதிரிகள் நாணயமான எதிரிகள். இனிமேல் நாம் சந்திக்கவுள்ளவர்கள் நாணயமற்ற எதிரிகள். எனவே, இனிமேல் போர் வியூகத்தை மாற்ற வேண்டும் என மதிமுக மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசினார்.

பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா - வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பாக இன்று (சனிக்கிழமை) முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது.

வைகோவுக்குப் பொன்விழா பாராட்டுப் பட்டயம் வழங்கி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது:

''இந்தப் பொன்விழாவிற்குப் பிறகுதான் வைகோவின் தியாக வாழ்க்கைக்கான பலனை இந்த இனம் அறுவடை செய்யவுள்ளது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் படம் எடுத்து அரசியல் செய்பவர் அல்ல வைகோ. பிரபாகரனுக்காக அத்தனை அடக்குமுறை சட்டங்களையும் பதம் பார்த்தவர். அந்த சட்டங்கள் அனைத்தும் வைகோவிடம் தோற்றுள்ளன. இதற்கு முன் நாம் சந்தித்த எதிரிகள் நாணயமான எதிரிகள். இனிமேல் நாம் சந்திக்கவுள்ளவர்கள் நாணயமற்ற எதிரிகள். எனவே, இனிமேல் போர் வியூகத்தை மாற்ற வேண்டும்.

சமூக நீதி, ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள சூழலில் அதனைத் தடுத்து நிறுத்தும் ஆற்றால் திராவிட இயக்கத்திற்கே உண்டு. முதல்வர்கள், பிரதமர்கள் புரட்சியாளர்களாக வர முடியாது. வைகோ போன்றவர்கள்தான் புரட்சியாளர்களாக வர முடியும். அவர் எடுக்கும் முடிவுகளைக் கட்டுப்படுத்தும் இயக்கமாகவும் திராவிடர் கழகம் இருக்கிறது. வைகோவைப் பொறுத்தவரை நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை இனத்திற்கும், உங்களுக்கும் பாதுகாப்பாகவும் இருக்கட்டும்''.

இவ்வாறு கி,வீரமணி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x