Published : 22 Sep 2018 08:38 AM
Last Updated : 22 Sep 2018 08:38 AM
மத்திய அரசால் தடை செய்யப் பட்ட வெங்காய வெடிகள் தற் போது பெட்டிக் கடைகளில் கூட தாராளமாக விற்பனை செய்யப் படுவதன் ஆபத்தை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
சிறிய வெங்காயம் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த வெடிகளை தரையில் வேகமாக வீசி எறிந்தால், சிறிய தீப்பொறி மற்றும் பெரும் சத்தத்துடன் வெடிக்கும் வெடியே வெங்காய வெடியாகும்.
இந்த வெடிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பரவலாக அனைத்து வெடி கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. கிராமப்புறங்களில் நாட்டு வெடி தயாரிப்பவர்கள் இந்த வெடிகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்தனர். இந்த வெடிகள் ஒரு இடத்திலிருந்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லும்போது லேசான அதிர்வு ஏற்பட்டாலே வெடித்து, பெரும் ஆபத்தை விளைவித்தன.
இதன் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த வெடிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து வெங்காய வெடிகள் தயாரிப்பை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வெடி மற்றும் கேப் தயாரிக்கும் நிறுவனங்கள் நிறுத்தி விட்டன.
இந்நிலையில் இந்த ஆண்டு, வெங்காய வெடிகள் 'பாப் பாப்' என்ற பெயரில் சிறிய அளவிலான அட்டைப் பெட்டிகளில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.
மேட் இன் சைனா என்று அந்த பெட்டிகளில் அச்சிடப்பட்டு, 50 வெடிகள் கொண்ட ஒரு சிறிய பெட்டியின் விலை ரூ.10, ரூ.15, ரூ.20 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது வெடி அல்ல என்றும் அதில் அச்சிடப்பட்டுள்ளது.
தற்போது சிறிய பெட்டிக் கடைகளில் கூட இந்த வெடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் ஆபத்தை உணராத பெற் றோரும், குழந்தைகளுக்கு இந்த வெடியை வாங்கித் தருகின்றனர்.
இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர் நீலகண்டன் கூறியது:
பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் தங்களது புத்தகப் பைகளிலும், சட்டைப் பைகளிலும் இந்த வெடிகளை பள்ளிக்கு எடுத்து வருகின்றனர். மாணவர்களிடம் தாராளமாகப் புழங்கும் இந்த வெடிகளை பள்ளிகளில் விளையாட்டாக ஒருவர் மீது ஒருவர் எறிந்து விளையாடுகின்றனர். பைகளில் வைத்திருக்கும் போது தவறி கீழே விழுந்தால் அது தரையில் பட்டு வெடித்து விடும் ஆபத்து உள்ளது என்பதால் மாணவர்களை எச்சரித்து வருகிறோம் என்றார்.
இந்த வெடிகள் பட்டாசுக் கடைகளில் விற்பனை செய்யப் படுவதில்லை என்றாலும், இணைய தளங்கள் மூலம் மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு, சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த வெடிகள் தற்போது நகரப் பகுதிகள் மட்டுமன்றி கிராமப் புறங் களில் பெட்டிக் கடைகளில் கூட தாராளமாக விற்பனை செய்யப்படும் ஒன்றாக மாறிவிட்டது.
இதுகுறித்து சிவகாசியைச் சேர்ந்த பட்டாசு விற்பனையாளர் சுரேஷ் கூறியது: இந்த வகை வெடிகளை தமிழகத்தில் உள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் தயாரிப்பதில்லை. இதில் ஆபத்துகள் அதிகம். நெருப்பு இல்லாமலேயே வெடிக்கக் கூடிய வெடி என்பதால், இதை பட்டாசுக் கடைகளில் விற்பனை செய்வதில்லை. இந்த வெடிப் பெட்டி மேலிருந்து தவறுதலாக கீழே விழுந்தாலே வெடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடும். பட்டாசுகளில் இந்த வகையைச் சேர்ந்தவை மிகுந்த ஆபத்து நிறைந்தவை. இந்த வெடிகளில் நம்நாட்டில் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT